மதம் என்பது மதம்பிடித்ததாக மாறக்கூடாது

மதம் என்பது மதம்பிடித்ததாக மாறக்கூடாது.அதுமனித நேய செயற்பாடாக மாறவேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் தெரிவித்தார்.

நவராத்தியின் சிறப்பினை எடுத்துக்காட்டவும் கல்வியில் மாணவர்கள் ஆர்வம் செலுத்தும் வகையில் மாபெரும் சரஸ்வதி தேவியின் சிலையொன்றை அமைப்பதற்கான அடிக்கல் நடும் நிகழ்வு நேற்று வியாழக்கிழமை காலை மட்டக்களப்பில் நடைபெற்றது.

மட்டக்களப்பு கல்லடி உப்போடை விவேகானந்தா மகளிர் மகா வித்தியாலயத்தில் இந்த நிகழ்வு நடைபெற்றது.

பாடசாலையின் அதிபர் திருமதி திலகவதி ஹரிதாஸ் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் பிரதம அதிதியாக கலந்துகொண்டார் ஆன்மீக அதிதியாக மட்டக்களப்பு இராம கிருஸ்ணமிசன் தலைவர் சுவாமி சதுர்ப்புஜானந்தஜி மகராஜ் கலந்துகொண்டார். பாடசாலையில் அமைக்கப்படவுள்ள இந்த சிலையினை வழங்குவதற்கு பாராளுமன்ற உறுப்பினர் உறுதியளித்துள்ளார்.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர்...

மட்டக்களப்பு மாவட்டத்தின் பொறுத்தவரையில் பெரும்பாலான பாடசாலைகளில் சரஸ்வதியின் திருவுருவச்சிலைனை வைக்கவேண்டிய நிலை காணப்படுகின்றது.அதற்கான ஏற்பாடுகளை நாங்கள் செய்துவருகின்றோம். சரஸ்வதி என்பது பொதுவான ஒரு தெய்வம்.கல்விக்குரிய தெய்வம்.எந்த மதத்தினை சேர்ந்தாலும் கல்விக்குரிய அந்தஸ்தை பெற்றுள்ளது சரஸ்வதி மட்டுமேயாகும்.அதன்காரணமாக சரஸ்வதி சிலையை வைத்து வழிபடுவது மிகவும் முக்கியமாகும்.

பாடசாலையின் அதிபராக இருக்கும் போதகர் ஒருவர் கூட தனது பாடசாலையில் சரஸ்வதி சிலையொன்றை அமைத்து தருமாறு என்னிடம் கோரிக்கை விடுத்துள்ளார். மதம் என்பது மதம் பிடித்ததாக மாறக்கூடாது.அது மனித நேய செயற்பாடாக மாற வேண்டும்.அந்த நிலையில் சரஸ்வதியை நாங்கள் எல்லோரும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

பாடசாலைகள் வெறுமனே மதத்திற்கான பாடசாலைகள் அல்ல.அது மாணவர்களுக்கான பாடசாலை.பாடசாலைகளில் உள்ள பெரும்பான்மை மாணவர்களின் வழிபாட்டு உரிமைகள் வழங்கப்பட வேண்டும்.ஏனைய மாணவர்களுக்கும் மத உரிமைகள் வழங்கப்பட வேண்டும்.

மதம் என்பது மதம்பிடித்ததாக மாறக்கூடாது

Read More