ரவிராஜ் வழக்கு தீர்ப்பினை எதிர்த்து தமிழ் தேசியக் கூட்டமைப்பு மேன்முறையீடு

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜின் படுகொலை வழக்கில் சிங்கள மொழி பேசும் ஜுரிகைள் சபையினால் வழங்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்து தமிழ் தேசியக் கூட்டமைப்பு மேன்முறையீடு செய்யவுள்ளது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ. சுமந்திரன் இந்த மேன்முறையீட்டு மனுவை இன்றைய தினம் தாக்கல் செய்யவுள்ளார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான நடராஜா ரவிராஜ், கடந்த 2006ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 10ஆம் திகதி கொழும்பு நாரஹேன்பிட்டியில் வைத்து சுட்டுக் கொலை செய்யப்பட்டிருந்தார்.

இந்தப் படுகொலை தொடர்பான வழக்கு விசாரணை சிங்களம் பேசும் விசேட ஜுரிகள் சபைக்கு முன்பாக நடைபெற்று வந்த நிலையில் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த ஐந்து பேரையும் கொழும்பு மேல் நீதிமன்றம் கடந்த டிசம்பர் மாதம் 24ஆம் திகதி விடுதலை செய்தது.

கடந்த ஒரு மாத காலமாக நடைபெற்று வந்த இந்த வழக்கில் ஜுரிகளின் ஏகமனதான முடிவின்படி, குற்றம் சாட்டப்பட்ட அனைவரையும் மேல் நீதிமன்ற நீதிபதி மணிலால் வைத்தியதிலக்க குற்றமற்றவர்கள் என விடுதலை செய்தார்.

இந்த வழக்கு விசாரணையின்போது முன்னாள் பிரதியமைச்சரான கருணா எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் மற்றும் ஸ்ரீலங்கா பாதுகாப்பு பிரிவு ஆகியோர் மீதும் பாரதூரமான சாட்சிகள் முன்வைக்கப்பட்டமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பினை எதிர்த்து இன்றைய தினம் தமிழ் தேசியக் கூட்டமைப்பு மேற்முறையீடு செய்கின்றது.

இதேவேளை மாமனிதர் நடராஜா ரவிராஜின் படுகொலை வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பில் தனக்கு திருப்தி ஏற்படவில்லை என்பதை ஸ்ரீலங்கா அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான ராஜித சேனாரத்னவும் அண்மையில் நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பின்போது தெரிவித்திருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.

புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளி துப்பாக்கியுடன் கைது

Read More