கிழக்கு பொதுமக்களின் காணி பிரச்சனைகளுக்கு எதிர்வரும் 16ஆம் திகதி தீர்வு!முதலமைச்சர்

மட்டக்களப்பு மாவட்டம் ஏறாவூர்ப்பற்று மற்றும் ஏறாவூர் நகரம் ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளிலுள்ள காணிப் பிணக்குகளைத் தீர்க்கும் இடம்பெயர் சேவை, எதிர்வரும் 16ஆம் திகதி ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் செயலகம் தெரிவித்துள்ளது.

இந்த நிகழ்வுகள் ஏறாவூர்ப் பற்று பிரதேச சபை கேட்போர் கூடத்தில்  எதிர்வரும் 16 ஆம் திகதி திங்கட்கிழமை காலை 9 மணியிலிருந்து மாலை 4 மணிவரை இடம்பெறவுள்ளது.

கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட்  தலைமையில் இடம்பெறவுள்ள இந்த அமர்வில் பொதுமக்கள் தங்களது காணிப்  பிரச்சனைகளை முன்வைத்து தீர்வுகளைப் பெற்றுக்கொள்ள முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த கால யுத்தம் மற்றும் அதற்குப் பின்னரான அசாதாரண சூழ் நிலைகளின்போது குறித்த பிரதேச செயலகப்  பிரிவுகளில்  வசிக்கும்   பொதுமக்கள், தங்களது காணி சம்பந்தப்பட்ட  பல்வேறு பிரச்சனைகளுக்கு நீண்ட காலமாக முகங்கொடுத்து வருகின்றனர்.

எனினும் குறித்த  மக்களின் பிரச்சனைகளுக்கு தீர்வைப்பெற்றுக்கொடுக்கும் முகமாக இந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக முதலமைச்சர் செயலகம் குறிப்பிட்டுள்ளது.

இந்த காணிப் பிணக்குகள் சம்பந்தமான அமர்வில் கிழக்கு மாகாண காணி அமைச்சின் செயலாளர், கிழக்கு மாகாண காணி ஆணையாளர் அலுவலக அதிகாரிகள், பிரதேச செயலாளர்கள், கிராம சேவகர்கள், மாவட்ட நில அளவை அத்தியட்சகர்கள், வனத் திணைக்கள அலுவலர்கள், காணிப் பயன்பாட்டு அலுவலர்கள், சமாதான நீதிவான்கள் உள்ளிட்ட இன்னும் பல அதிகாரிகளும் உத்தியோகத்தர்களும் கலந்துகொள்ளவுள்ளனர்.

சம்பந்தன் பேசிய போது அரசியல் பேசவேண்டாம் என குழம்பிய மக்கள் (காணொளி)

Read More