வெலிக்கடை சிறை படுகொலை குறித்த பரிந்துரைகளை அமுல்படுத்துமாறு சிவில் அமைப்புக்கள் கண்டனம்

வெலிக்கடை சிறை படுகொலை, காணாமல் போனோர் விவகாரம் தொடர்பாக ஆணைக்குழுக்களினால் பரிந்துரைக்கப்பட்ட விடயங்களை நல்லாட்சி அரசாங்கம் துணிச்சலாக முன்வந்து அமுல்படுத்த வேண்டுமென சிவில் அமைப்புக்கள் வலியுறுத்தியுள்ளன.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் ஆட்சிகாலத்தில் கொழும்பு வெலிக்கடை சிறைச்சாலையில் இடம்பெற்ற படுகொலைக்கு நீதிகோரி இன்றைய தினம் கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

இதன்போதே இந்த கோரிக்கையை சிவில் அமைப்புக்கள் முன்வைத்தன.

கொழும்பு வெலிக்கடை சிறைச்சாலையில் கடந்த 2012ஆம் ஆண்டு இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகச் சம்பவத்தில் 28 கைதிகள் வரை உயிரிழந்தனர்.

இந்த சம்பவத்திற்குப் பின்னால் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ச இருப்பதாகவும், அவரே இராணுவத்தை பயன்படுத்தி குறிப்பிட்ட சில கைதிகளை படுகொலை செய்ததாகவும் குற்றச்சாட்டு காணப்படுகின்றது.

இந்த நிலையில் இந்த படுகொலைக்கு நீதிகோரி இன்று முற்பகல் சமூக நீதிக்கான தேசிய இயக்கம் மற்றும் காணாமல் போனோரது பெற்றோர் ஒன்றியம் என்பன இணைந்து கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்தன.

வெலிக்கடை சிறைச்சாலையின் நுழைவாயிலுக்கு முன்பாக முன்னெடுக்கப்பட்ட இந்தப் போராட்டத்தில் குறித்த அமைப்புக்களைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற சமன் ரத்னப்பிரிய, பேராசிரியர் சரத் விஜேசூரிய, மனித உரிமை செயற்பாட்டாளர் பிரிட்டோ பெர்ணான்டோ, காமினி வியங்கொட, முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினர் அசாத் சாலி உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

இதன்போது ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட பேராசிரியர் சரத் விஜேசூரிய

“புதிய அரசாங்கம் ஆட்சிக்குவந்த பின்னர் வெலிக்கடை சிறைச்சாலையில் சிறைக்கைதிகள் படுகொலை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பில் ஆராய்வதற்கு ஆணைக்குழு ஒன்றை அமைத்தது. அந்த ஆணைக்குழு நீதியமைச்சருக்கு அறிக்கை ஒன்றை கையளித்துள்ளது. நீதியமைச்சர் அந்த அறிக்கைப்படி நடவடிக்கை எடுப்பார் என எதிர்பார்த்திருந்தோம். ஆனால் அந்த அறிக்கை தொடர்பில் அவர் வாய்திறக்கவே இல்லை. அத்துடன் அறிக்கையிலுள்ள பரிந்துரைகளை அமுல்படுத்துவதற்கும் அமைச்சர் நடவடிக்கை எடுக்கவில்லை. அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்ட ஆணைக்குழுவினால் முன்வைக்கப்பட்ட அறிக்கையின் பரிந்துரைகளை அமுல்படுத்தாவிடின் மஹிந்த ராஜபக்சவின் ஆட்சிக்கும், புதிய அரசாங்கத்தின் ஆட்சிக்கும் இடையில் எவ்வித வித்தியாசமும் பார்க்க முடியாது. இதுகுறித்து ஜனாதிபதியை சந்தித்து இந்த அறிக்கையைப் பெற்று அதன் பரிந்துரைகளை அமுல்படுத்துமாறு கோரினோம். வேலிகடை சிறைச்சாலையில் இடம்பெற்ற  படுகொலை தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள பரிந்துரைகளை அமுல்படுத்துமாறு ஜனாதிபதியிடமும், பிரதமரிடமும் கோருகின்றோம். எனினும் குறித்த பரிந்துரைகளை அமுல்படுத்தாததன் நோக்கம் குறிப்பிட்ட ஒருவரை பாதுகாக்கும் நடவடிக்கையாக இருந்தால் அது ஏற்றுக்கொள்ள முடியாத செயல் என்று கூறுகின்றோம்” - என்றார்.

இதன்போது ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட பிரிட்டோ பெர்ணான்டோ “வெலிக்கடை படுகொலை தொடர்பில் போதியளவு தகவல்கள் வெளியாகியுள்ள போதிலும் அதுகுறித்து துணிச்சலாக நடவடிக்கை எடுக்க அரசாங்கம் தயங்குவதையிட்டு நாங்கள் கவலையடைகின்றோம். அதுமட்டுமல்ல காணாமல்போனோர் குறித்து முன்னேற்றம் காணப்படுகின்ற போதிலும் அதனை முடிவுறுத்தி பாதிக்கப்பட்டவர்களின் பெற்றோரது தேவைகளைப் பூர்;த்தி செய்யும் அளவிற்கு அரசாங்கம் செல்கிறதில்லை. ஒருபுறம் அரசாங்கம் எமக்கு வழங்கிய பேச்சு சுதந்திரத்தை முழுமையாக பயன்படுத்தி அரசாங்கத்திற்கு இந்த விடயம் தொடர்பில் அழுத்தம் பிரயோகிப்போம். விசேடமாக வெலிக்கடை படுகொலை அறிக்கை, கட்டுநாயக்க ரொசான் படுகொலை அறிக்கை மற்றும் காணாமல் போனோர் விவகாரத்தில் நடைமுறைப்படுத்த இணக்கத்திற்கு வந்த விடயங்களை அமுல்படுத்தல் என்பவற்றுக்கு எமது சுதந்திரத்தை முழுமையாக ஈடுபடுத்த வேண்டும்” - என்றார்.

 

  

  

நாடாளுமன்ற உறுப்பினர் ஞா. ஸ்ரீநேசன் நரிப்புழுத்தோட்ட கிராமத்துக்கு திடீர் வியஜம்

Read More