தமிழ் மக்களையும், தமிழ் மொழியையும் அழிக்கும் செயற்பாடுகள் தீவிரம் ; கோடீஸ்வரன்

தமிழ் மக்களையும், தமிழ் மொழியையும் கொச்சப்படுத்துகின்ற செயற்பாடுகளில் வேற்று இனத்தவர்கள் மிகவும் தீவிரமாக செயற்பட்டுக்கொண்டிருப்பதாக அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் தெரிவித்தார்.

இதனால் மிகவும் தொன்மை வாய்ந்த தமிழ் மொழியினை பேணி பாதுகாத்து அடுத்த சந்ததியினருக்கு கொண்டு செல்ல வேண்டிய பொறுப்பு அனைவரிடமும் காணப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.

பாண்டிருப்பு அகரம் சமூக அமையத்தின் ஏற்பாட்டில் அதன் தலைவர் செ.துஸ்யந்தனின் படைப்பில் உருவான பல்சுவை இதழான விருந்து எனும் நூல் வெளியீடானது நேற்று மாலை கல்முனை தமிழ் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன், அன்று பாரதியார் கூறியவாறு  தமிழர்கள் எட்டுத்திசைகளுக்கும் சென்று தமிழையும், தமிழர்களது கலை, கலாசார, பண்பாடுகளையும் நிலைநிறுத்த வேண்டிய கடமைப்பாடு காணப்படுவதாக குறிப்பிட்டார்..


தமிழ் மொழியானது மிகவும் செம்மையானதும் முதுமையானதுமான மொழியாக இருப்பதனால் அதனை பாதுகாக்க வேண்டியது அனைவரதும் தலையாயன கடமை எனவும் அவர் குறிப்பிட்டார்.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் வாழ்கின்ற தமிழர்கள் தமிழ் கலாசாரங்களை பின்பற்ற வேண்டும். மாறாக மேலைத்தேய கலை கலாசாரங்களுக்குள் தங்களை ஈடுபடுத்தாமல் எமது கலாசாரங்களுக்கு முன்னுரிமை கொடுத்து வாழப்பழகிக்கொள்ள வேண்டும்.

தற்போது தமிழர்களது வரலாறுகள் திரிவுபடுத்தப்பட்டுக்கொண்டிருப்பதனால் இது தொடர்பில் அவதானமாக செயற்படவேண்டும் என அவர் குறிப்பிட்டார்.

 

  

  

  

  

மண்டூர் கண்ணன் வித்தியாலத்தில் யானையின் அட்டகாசம்

Read More