வரட்சியால் பாதிக்கப்பட்டோருக்கு நிவாரணம் வழங்குவது தொடர்பான கலந்துரையாடல்

மட்டக்களப்பில் வரட்சி நிலமை காரணமாகப் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவது தொடர்பான விசேட கலந்துரையாடல் (05) மாலை மாவட்ட செயலகத்தில் அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் மேலதிக செயலாளர் எஸ்.அமலநாதன் தலைமையில் நடைபெற்றது.

நாட்டில் ஏற்பட்டுள்ள வரட்சி நிலைமையை எதிர்கொள்வது தொடர்பில் ஜனாதிபதி செயலகத்தினால் அனர்த்த முகாமைத்துவ அமைச்சுக்கு விடுக்கப்பட்ட பணிப்புரைக்கு அமைவாக இந்த வரட்சியை எதிர் கொள்ளும் நடவடிக்கைகள் நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அதற்கு அமைவாக மட்டக்களப்பு மாவட்டத்திலும் அதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.அதன் ஒரு பகுதியாக எதிர்காலத்தில் ஏற்படவுள்ள வரட்சிப் பாதிப்புகள் தொடர்பில் ஆராயும் கூட்டம் நடைபெற்றது.

இதில் எதிர்காலத்தில் ஏற்படவுள்ள குடிநீர்த் தட்டுப்பாட்டை எதிர்கொள்ளல், விவசாயங்களுக்கு வழங்க வேண்டிய நீர்ப்பாசனம், மாவட்டத்தின் தற்போதைய நீரினது கொள்ளளவு என்பன பற்றி ஆராயப்பட்டது.

மேலும், அனர்த்த முகாமைத்துவ அமைச்சுடன் இணைந்து செயற்படுகின்ற நீர்ப்பாசனம், நீர் வளங்கள் மற்றும் உள்ளூராட்சி ஆகிய திணைக்களங்களிடம் வரட்சியை எதிர்கொள்வது தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.
அதே நேரம், மாவட்டத்தின் குடிநீர்த் தட்டுப்பாட்டை எதிர் கொள்ளும் வகையில் உள்ளூராட்சி சபைகளுக்கான நீர் விநியோக வவுச்சர்களின் இருப்பு மேலதிக தேவைகளுக்கான கொள்வனவுகள், நீர்த் தாங்கிகள் வழங்குதல், நிவாரண உதவிகள், சமைத்த உணவுகள் வழங்குதல், வாழ்வாதார உதவிகள் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு விடயங்களும் இதன் போது ஆராயப்பட்டன.

அத்துடன், காலநிலை மாற்றம் காரணமாக எதிர்பார்க்கப்பட்ட மழை கிடைக்காதமையினால் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏற்பட்ட வரட்சியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னாயத்த நடவடிக்கைகள் தொடர்பில் இக்கூட்டத்தில் மிக முக்கியமாக ஆராயப்பட்டன.

இந்த விசேட கலந்துரையாடலில் அனர்த்த முகாமைத்துவ உதவிப் பணிப்பாளர் எஸ்.இன்பராஜன், மட்டக்களப்பு மாவட்ட உதவி மாவட்டச் செயலாளர் எஸ்.ரங்கநாதன், பிரதம கணக்காளர் எஸ்.நேசராஜா ஆகியோர் பங்கு கொண்டதுடன் பிரதேச செயலாளர்கள், திணைக்களத் தலைவர்கள் மற்றும் உள்ளூராட்சித் திணைக்களங்களின் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

  

  

மட்டக்களப்பில் (A/L)சங்கீத வினாத்தாளில் குழறுபடி

Read More