கிழக்கில் தற்கொலைகள் அதிகரிப்பதற்கு காரணம் வெளிச்சத்துக்கு வந்தது

தற்காலத்தில் மட்டக்களப்பில் அதிகரித்து வரும் தற்கொலைகளுக்கு முதன்மை காரணமாக நுண்கடன் நிதி நிறுவனங்கள் அமைகின்றன என நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாளேந்திரன் தெரிவித்தார்.

இலுப்பையடி பாலர்சேனை மக்களை சந்தித்து பேசிய போதே அவர் இவ்வாறு கூறினார்.

இதன்போது தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்,

பாடசாலை அல்லது வேறு ஏதாவது பொதுக்கூட்டம் என்றால் எந்த ஒரு பொது மகனும் வருவது கிடையாது.ஆனால் நுண்கடன் நிதி நிறுவனம் கூட்டம் என்றால் படிப்புக்கு செல்லும் பிள்ளைகள் போல் நிரையில் நிற்கும் அவலநிலை இன்று மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள பல கிராமங்களில் நடந்தேறிவருகின்றது.

நுண்கடன் நிதி நிறுவனங்கள் 26 தொடக்கம் 30 வீதத்துக்கு மக்களிடத்தில் வட்டிக் கொடுக்கின்றார்கள்.

இந்த வருடத்தில் முனைத்தீவில் 3 வயது பிள்ளையின் தாய் தூக்குப்போட்டு தற்கொலை, செங்கலடி ஜெயந்திபுரத்தில் நுண்கடன் பிரச்சினையில் ஒரு குடும்பப் பெண்ணுக்கு வெட்டு சம்பவம், இருதயபுரத்தில் கணவன் மனைவியை வெட்டிக் கொலை போன்ற அனைத்து விதமான தற்கொலைகள் மற்றும் கொலைகளுக்கு கூடுதலான காரணம் மட்டக்களப்பு மாவட்டத்தில் இயங்கும் நுண்கடன் நிதி நிறுவனங்களே.இலுப்பயடிச்சேனை பாலர்சேனையில் எத்தனையோ நுண்கடன் நிறுவனங்கள் ஏழை மக்களை ஆக்கிரமித்துள்ளது. பொதுமக்கள் விழிப்பாக இருக்க வேண்டும்.

ஆசை வார்த்தைகளைக் காட்டி கடன்களை பெற்ற பின் அதற்குப் பின்னர் எழும்புகின்ற பிரச்சினையை சிந்தித்துப் பாருங்கள்.அதேபோல் வெளி மாவட்டத்தில் இருந்து சிங்கள மக்களினால் துரத்தி அடிக்கப்பட்ட மதுபானசாலைகள், நுண்கடன் நிதி நிறுவனங்கள் அனைத்தும் மட்டக்களப்பு மாவட்டத்தை ஆக்கிரமித்துள்ளது என இதன்போது சுட்டிக்காட்டினார்.

மேலும், எதிர்காலத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள தமிழ் சந்ததியினை அழித்து இல்லாமல் ஆக்கும் செயற்பாடாகவே இது அமைகிறது என அவர் இதன்போது மேலும் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

 

  

  

உலக கவனத்தை ஈர்ப்பதற்கான மாபெரும் பேரணி ;மட்டக்களப்பில் அழைப்பு சுவரொட்டிகள்

Read More