மண்டூர் வைத்தியசாலைக்கு வைத்தியரை நியமனம் செய்துகொடுக்குமாறு ஸ்ரீநேசன் கேட்டுக்கொள்ளல்.

(விஜயரெத்தினம்  )
மண்டூர் வைத்தியசாலையில் நிரந்தர வைத்தியரை நியமிக்குமாறும்,மண்டூர் பிரதேச மக்களின் வைத்தியதேவைகளையும் வழங்குமாறும் வெல்லாவெளி பிரதேச ஒருங்கிணைப்பு குழுத்தலைவரும்,பாராளுமன்ற உறுப்பினருமான  ஞானமுத்து ஸ்ரீநேசன் தெரிவித்தார். நிரந்தர வைத்தியர்  இன்மையினால் மக்கள் பல சிரமங்களை எதிர் நோக்கி வருகின்றார்கள்.இது சம்பந்தமாக கேட்டபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.

போரதீவுப்பற்று பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட மண்டூர்  வைத்தியசாலை கடந்த 20 வருடங்களுக்கு முன் நிர்மாணிக்கப்பட்ட போதிலும் கடந்த அரசாங்கத்தின் திட்டமிடப்படாத அபிவிருத்தி செயற்பாட்டினால் பொருத்தமற்ற இடத்தில்  பல மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்பட்டுள்ளது.இருந்தபோதிலும்  போதிய பராமரிப்பு வசதியின்றியும், தற்போது இங்கு நிரந்தர வைத்தியர் இன்மையினாலும் இங்குள்ள மக்கள்  பல சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றார்கள்.

இங்குள்ள வறிய மக்கள் விவசாயம், கால்நடை மீன்பிடி ,கூலித்தொழில், போன்றவற்றை வாழ்வாதாரத் தொழிலாகக் கொண்டவர்கள் ஆவர். இவர்களுக்கான மருத்துவத் தேவையினை நிறைவேற்றுவதற்கு  இங்குள்ள ஒரேயொரு வைத்தியசாலை இதுவேயாகும். .இங்கு நோயாளர் விடுதி, மகப்பேற்று விடுதி, வெளிநோயாளர் பிரிவு மருந்தகம் வைத்தியர் விடுதி ,அம்புலன்ஸ் வசதி, போன்றவற்றை கொண்டு அமைந்துள்ளது. இவ் வைத்தியசாலையில் பௌதீகவளங்களை  கொண்டுள்ள போதிலும் பிற்பகல் வேளைகளிலிருந்து மறு நாள் வைத்தியர் கடமைக்கு வரும்வரை இங்குள்ள மக்களின் அவசர மருத்துவ சேவை கேள்விக்குறியாகவுள்ளது.சின்னவத்தை, மருங்கையடிப்பூவல், பாலமுனை, தம்பலவத்தை, மண்டூர் 16ம் கொலனி ,13ம் கிராமம் ,போன்ற பல கிராமங்களிலுள்ள (எல்லைப்புற கிராமங்களிலுள்ள சிங்கள மக்கள் உட்பட)1000க்கு மேற்பட்ட குடும்பங்களுக்கு இவ் வைத்தியசாலையின் சேவை முக்கியமானதொன்றாகும். இங்கு காடு சார்ந்த பகுதி என்பதால் காட்டுயானை தாக்கம், விசச் சந்துக்கள் தாக்கம், (முதலைத்தாக்கம் )மற்றும் திடீர் விபத்துக்கள் ,போன்ற சந்தர்ப்பங்களில் இவ் வைத்தியசாலையில் நிரந்தர வைத்தியர் இன்மையினால் நோயாளிகள் தூர இடங்களிலுள்ள கல்முனை, களுவாஞ்சிகுடி, மட்டக்களப்பு போன்ற வைத்தியசாலைகளுக்கு எடுத்துச் செல்லும் சந்தர்ப்பங்களில் அவர்களின் உயிர் இழப்புக்கள் தொடர்ச்சியாக ஏற்பட்டுவருகின்றது.
கடந்த காலங்களில் இங்கு ஒரு நிரந்தர வைத்தியர் பணியாற்றியதாகவும், தற்போது புதிய முதல் நியமனம் பெறும் வைத்தியர்கள் குறுகிய காலம் பணியாற்றி விட்டு இடமாற்றம் பெற்றுச் செல்வதாகவும், இவ்விடயம் சம்பந்தமாக முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்ட போதிலும், இதுவரை நிரந்தரத் தீர்வு கிடைக்கவில்லையெனவும், அடைமழை காலத்தில் ஏற்படும் வெள்ள நீரோட்டத்தினால் மண்டூர் பகுதியில் போக்குவரத்துக்கள் துண்டிக்கப்படுவதனாலும், இரவு வேளைகளில் போக்குவரத்து வசதி இன்மையினாலும் இவ் வைத்திய சாலையில் நிரந்தர வைத்தியரின் தேவை முக்கியமானதாகும். எனவே கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர், செயலாளர்,  அதிகாரிகள் உடனடியாக  மண்டூர் வைத்தியசாலைக்கு நிரந்தர வைத்தியரையும் நியமனம் செய்து,மக்களின் மருத்துவ வசதிகளையும் வழங்குமாறு குறிப்பிட்டிருந்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் வெற்றி பெற்ற வேட்பாளர்களின் விருப்பு வாக்கு விபரம்

Read More