தமிழ் தேசிய கூட்டமைப்பு பொங்கல் விழா மூலம் எதனை சாதிக்கப்போகின்றது! மட்டு மக்கள் விசனம்

மட்டக்களப்பு மாவட்டத்தின் அண்மைய காலமாக இடம்பெற்றுவரும் பல்வேறு சம்பவங்கள் தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பு வாய்மூடி மௌனியாக செயற்பட்டுவருவது தொடர்பில் தமிழ் மக்கள் மத்தியில் பாரிய சந்தேகத்தினை ஏற்படுத்திவருகின்றது.

கடந்த ஆட்சிக்காலத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு என்ன என்ன விடயங்களுக்காக போராட்டங்களையும் கடுமையான வாதப்பிரதிவாதங்களையும் செய்துவந்ததோ அந்த விடயங்களை இன்று வேடிக்கை பார்க்கும் நிலைக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு சென்றுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தினைப்பொறுத்தவரையில் கடந்த காலத்தில் இடம்பெற்ற யுத்த சூழ்நிலை மற்றும் இயற்கை அனர்த்தங்களினால் கடுமையான பாதிப்புகளை எதிர்கொண்ட பிரதேசமாகும்.

வடகிழக்கு மாகாணத்தினைப்பொறுத்தவரையில் கிழக்கு மாகாணம் விசேட தேவைகளைக்கொண்டிருப்பதை யாரும் மறுக்கமுடியாது.இந்த நாட்டில் தமிழ் மக்கள் உரிமைப்போராட்டத்தில் ஈடுபடுவதற்கு காரணமாக அமைந்தது வடக்கினை விட கிழக்கில் மேற்கொள்ளப்பட்டுவந்த அடக்குமுறைகளே காரணமாக அமைந்தன.

அதன் காரணமாகவே அகிம்சை போராட்டங்களும் ஆயுதப்போராட்டங்களும் வடகிழக்கினை மையப்படுத்தி ஆரம்பிக்கப்பட்டது.அந்த ஆயுதப்போராட்டம் மௌனிக்கப்பட்டன் பின்னர் அந்த போராட்டம் தமிழ் தேசிய கூட்டமைப்பின் கைகளுக்கு சென்றது.இன்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் கைகளில் தமிழர்களின் நிலை உள்ள நிலையில் அவர்களின் செயற்பாடுகள் தொடர்பில் கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுவந்தாலும் தமிழர்களின் தனித்துவமான கட்சியாகவும் தமிழர்களின் குரலாகவும் இன்று தமிழ் தேசிய கூட்டமைப்பே உள்ளது.

இந்த நிலையில் அவர்கள் மீது சுமத்தப்பட்டுள்ள பொறுப்புகளினை அவர்கள் எந்தளவு அக்கரையுடன் செயற்படுகின்றார்கள் என்பது கேள்விக்குறியாகவே இருந்துவருகின்றது.

இன்று மட்டக்களப்பு மாவட்டத்திலும் அவ்வாறான ஒரு நிலையே இருந்துவருகின்றது.பல்வேறு வழிகளிலும் பாதிக்கப்பட்ட மட்டக்களப்பு மாவட்டத்தினை தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைமை உட்பட அக்கட்சினை Nசுர்ந்தவர்கள் மாற்றந்தாய் மனப்பான்மையுடனேயே நோக்கிவருவதாக மட்டக்களப்பு தமிழ் மக்களினால் பகிரங்கமாக குற்றஞ்சாட்டும் நிலையேற்பட்டுவருகின்றது.

இந்த நாட்டில் நல்லாட்சியை ஏற்படுத்துவதற்கு பாரிய பங்களிப்பினை செய்தவர்கள் தமிழர்கள் என்ற ரீதியில் மட்டக்களப்பிலும் ஏதாவது நடக்கும் என்றால் இன்னும் அதற்கான அடிகூட எடுத்துவைக்கப்படவில்லை.

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த ஆட்சிக்காலத்தில் இருந்த அதே அரச நிர்வாகமும் அதே அரசியல்வாதிகளும் மீண்டும் ஆளும் நிலையே இருந்துவருகின்றது.அத்துடன் தமக்குள்ள செல்வாக்கினைப்பயன்படுத்தி கடந்த காலத்தில் தமிழர்களை எவ்வாறு அடக்கியாள முற்பட்டார்களோ அதனைவிட இன்று அதிகளவில் செயற்படுவதை காணமுடிகின்றது.ஆனால் கடந்த காலத்தில் இவ்வாறான செயற்பாடுகளை தமிழ் தேசிய கூட்டமைப்பு கடுமையாக எதிர்த்துவந்த நிலையில் இன்று அவற்றினை வேடிக்கை பார்க்கும் நிலையே இருந்துவருகின்றது.

குறிப்பாக சொல்லப்போனால் இன்று ஒரு மாவட்ட அரசாங்க அதிபரையே மாற்றுவதற்கு திராணியற்றவர்களாக தமிழ் தேசிய கூட்டமைப்பினர் உள்ளது மட்டக்களப்பு தமிழ் மக்களை கடுமையாக விசனமடையவைத்துள்ளது.

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரின் செயற்பாடுகள் தொடர்பில் கடந்த ஆட்சிக்காலத்தில் பல்வேறு விமர்சனங்களை முன்வைத்த தமிழ் தேசிய கூட்டமைப்பினர் இன்று பொட்டிப்பாம்பாகவுள்ளனர்.அண்மைக்காலமாக அரச அதிபர் மேற்கொண்டதாக தெரிவிக்கப்படும் முறைகேடுகள் இணையத்தளங்களில் செய்திகள் வெளிவந்தவண்ணமுள்ள நிலையில் அது தொடர்பில் விசாரணை செய்யுமாறு கூட இந்த தமிழ் தேசிய கூட்டமைப்பு கோரிக்கை விடுக்கவில்லை.அவ்வாறானால் அரசாங்க அதிபர் மேற்கொள்ளும் முறைகேடுகளில் தமிழ் தேசிய கூட்டமைப்பினருக்கும் பங்கு உள்ளதா எனவும் தமிழ் மக்கள் கேள்வியெழுப்பும் நிலையுள்ளது.

அண்மையில் மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டத்திற்கு ஊடகவியலாளர்கள் அனுமதிக்கப்படாமல் பொலிஸாரைக்கொண்டு தடுத்து நிறுத்தப்பட்டனர்.

அது தொடர்பில் பிரதியமைச்சர் அமீர்அலி மூன்று அரச அதிகாரிகள் கடந்த கூட்டத்தினை முகப்புத்தகம் ஊடாக நேரடி ஒளிபரப்பு செய்ததாகவும் அதன் காரணமாகவே ஊடகவியலாளர் அனுமதிக்கப்படவில்லையென்று கூறியிருந்தார்.பின்னர் கிழக்கு மாகாணசபை உறுப்பினர்கள் தேவையற்ற விடயங்களை தெரிவிப்பதன் காரணமாகவே மாவட்ட அரசாங்க அதிபரின் கோரிக்கைக்கு அமைவாக தாங்கள் இந்த தீர்மானத்தை எடுத்ததாக கூறியிருந்தார்.

இவ்வாறான முன்னுக்கு பின்னு முரணாண கருத்துகளை கூறி கடந்த எதனை மறைப்பதற்காக முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன என்பதை தமிழ் தேசிய கூட்டமைப்பு கோரவில்லை.இது தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பினால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இவ்வாறான நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் மக்களுக்கு இழைக்கப்படும் அநீதியை தடுத்து நிறுத்துவதற்கு யார் உள்ளனர் என்பதே இன்று மட்டக்களப்பு மாவட்ட தமிழ் மக்களுக்கு உள்ள கவலையாகவுள்ளது.

இவ்வாறு மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் மக்களுக்கு எதுவும் செய்யமுடியாத நிலையில் உள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பு எதிர்வரும் 19ஆம் திகதி பொங்கல் விழாவினை மட்டக்களப்பில் ஏற்பாடுசெய்துள்ளது.

இந்த பொங்கல் விழாவில் மட்டக்களப்பு தமிழ் மக்களை கலந்துகொள்ளுமாறு என்னத்தை கூறி தமிழ் தேசிய கூட்டமைப்பு அழைக்கப்போகின்றது.மட்டக்களப்பு மாவட்டத்தையே பல்வேறு வழிகளில் பறிகொடுத்துக்கொண்டிருக்கும்போது எதுவித நடவடிக்கையும் எடுக்காத தமிழ் தேசிய கூட்டமைப்பு பொங்கல் விழா மூலம் எதனை சாதிக்கப்போகின்றது என்று மக்கள் கேள்வியெழுப்புகின்றனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தினை சேர்ந்த ஒருவரை மாவட்ட அரசாங்க அதிபராக நியமிக்குமாறு கடந்த காலத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைமையிடம் விடுக்கப்பட்ட சிறிய கோரிக்கையினைக்கூட நிறைவேற்றமுடியாத தலைமை எந்த முகத்துடன் மட்டக்களப்பு தமிழ் மக்களை சந்திக்கவரப்போகின்றது என்பதை அவர் உணர்ந்துகொள்ளவேண்டும்.

இன்னும் 5 நாட்களில் செங்கலடி ஏ5 வீதியில்...அநாகரிக பிக்கு சூளுரை (காணொளி)

Read More