தமிழ் மக்களை ஏமாற்ற முடியாது!

சிறுபான்மையின மக்களுக்கான சரியான தீர்வை, இந்த வருடத்திற்குள் நல்லாட்சி அரசாங்கம் வழங்க வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். வியாழேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.

தமிழ் மக்கள் எனியும் பொறுமை காக்க மாட்டார்கள் எனக் குறிப்பிட்ட அவர், தமிழ் மக்களை ஏமாற்ற முடியாது என்ற நிலைக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள வர்த்தக துறையினர் மற்றும் வர்த்தக துறை மாணவர்கள் உட்பட பல்வேறு துறை மாணவர்களை இணைத்து மட்டக்களப்பு வர்த்தக யூனியன் ஆரம்பிக்கப்பட்டது.

இந்த ஆரம்ப நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய மட்டக்களப்பு மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். வியாழேந்திரன்,

தமிழ் சமூகம் இன்று பிச்சையெடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதை பார்க்கும் போது மிகவும் கவலையளிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரமடைந்த காலம் தொடக்கம், நாட்டை மாறி மாறி ஆட்சி செய்த அரசாங்கங்கள் தமிழ் பேசும் மக்களை அரவணைத்து செல்லவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.  

தமிழ் மக்களுக்கு நியாயமான உரிமையை வழங்காமல் ஏமாற்றி வந்ததாகவும் இதன் காரணமாகவே, தமிழர்கள் அகிம்சை ரீதியில் முதன்முறையாக போராட்டத்தில் குதித்தார்கள் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பல்கலைக்கழக அனுமதியில், திட்டமிட்டு புறக்கணிக்கப்பட்டதன் காரணமாக அகிம்சை ரீதியான போராட்டம் ஆயுத ரீதியான போராட்டமாக மாற்றம் பெற்றதாகவும் எஸ். வியாழேந்திரன் குறிப்பிட்டுள்ளார்.

2009 ஆம் ஆண்டு முள்ளியவாய்க்காலில் யுத்தம் மௌனிக்கப்பட்டாலும், கடந்த ஏழு வருடமாக ஜனநாயக ரீதியான போராட்டங்களை முன்னெடுத்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த அரசாங்கத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நியாயமான தீர்வை வழங்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

தமிழர் தாயக பூமியில் சுதந்திரமாக, நிம்மதியாக வாழவேண்டும் என்றும் கையகப்படுத்தப்பட்ட காணிகள் விடுவிக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

சிறையிலுள்ள அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட வேண்டும் என்றும் வாழ்வாதாரத்தை இழந்தவர்களுக்கு அவற்றை வழங்க வேண்டும் எனப் பல்வேறு விடயங்களை கருத்திற்கொண்டே ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தியதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நாட்டில் சிறுபான்மை மக்கள் கூறுவதை பெரும்பான்மை சமூகம் கேட்க வேண்டுமானால் சிறுபான்மை சமூகத்திற்கு நிரந்தர தீர்வு ஒன்று கிடைக்கவேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு சிறுபான்மையின மக்கள் கல்வியில் யாரும் தொட முடியாத உச்சத்தை நோக்கி வளரவேண்டும் என்றும் பொருளாதார ரீதியில் வளர்ச்சியடைய வேண்டும் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்இ வியாழேந்திரன் கேட்டுக்கொண்டுள்ளார்.

  

  

அரசடித்தீவு ஶ்ரீ முத்துமாரியம்மன் தீக்கட்டை எழுந்தருளல்

Read More