அடிப்படை அறிவற்றவர்கள், ஊடகங்களுக்காகவே பேசித் திரிகின்றார்கள்!வெள்ளிமலை

சிங்கள மக்களுக்கும், இஸ்லாமிய மக்களுக்கும் அரசியல், பண்பாடு போன்றவற்றைக் கற்றுக்கொடுத்தவர்கள் தமிழர்கள் என்பதை பிரதியமைச்சர் அமீரலி புரிந்துகொள்ள வேண்டும் என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஞானமுத்து கிருஸ்ணபிள்ளை (வெள்ளிமலை) தெரிவித்துள்ளார்.

கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள் அடிப்படை அறிவற்றவர்கள், ஊடகங்களுக்காகவே பேசித் திரிகின்றார்கள் என கிராமிய பொருளாதார அபிவிருத்திப் பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ். அமீரலி அண்மைக்காலமாக கருத்துக்களைத் தெரிவித்து வருவது வேடிக்கையான விடயம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மட்டக்களப்பு – காத்தான்குடி பிரதேச செயலகத்தில் கடந்த வாரம் இடம்பெற்ற நிகழ்வொன்றில் பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ். அமீரலி கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள் குறித்து விமர்சனம் வெளியிட்டிருந்தார்.

இதுகுறித்து, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தற்போதைய கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான ஞானமுத்து கிருஸ்ணபிள்ளை, ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை வரலாறு, தமிழர்களின் வரலாறு போன்றவற்றை தெரியாமல், பிரதியமைச்சர் அமீரலி இவ்வாறு பேசித் திரிவது பொருத்தமற்ற விடயம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நல்லாட்சி என்ற போர்வையில் அரசு சென்று கொண்டிருக்கின்ற போது, நல்லாட்சியிலுள்ள பிரதியமைச்சர் அமீரலி அர்த்தமற்றவார்த்தைப் பிரயோகங்களை பிரயோகிப்பது, இந்த நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் செய்யும் துரோகம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.  

இலங்கை நாடு பிளவுபட வேண்டும் என்றோ, இனவாதம் பேசவேண்டும் என்றோ அன்றும், இன்றும் தமிழ் தலைவர்கள் நடந்து கொள்ளவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

1948 ஆம் ஆண்டு சுதந்திரம் பெற்ற பின்னர் இந்த நாட்டில் இருந்த சிங்கள பெரும்பான்மையான அரசியல்வாதிகள், அரசியல், கல்வி, உள்ளிட்ட அனைத்து விடயங்களிலும், தமிழர்களைப் புறந்தள்ளியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன் காரணமாகத் தான் தமிழர்கள் காலிமுகத்திடல் தொடக்கம் முள்ளிவாய்க்கால் வரை ஆயுதம் ஏந்திப் போராடுவத்கு நிற்பந்திக்கப்பட்டார்கள் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.  

இந்த நிலையில், பிரதியமைச்சர் அமீரலி, சம்பிக்க ரணவக்க, விமல் வீரவம்ச, மற்றும் சில பௌத்த பிக்குமார் பிரிவினைவாதக் கருத்துக்களைத் தெரிவித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.  

மனித இனத்தைக் கூறுபோடுகின்ற கருத்துக்களை இனிமேலும் பிரதியமைச்சர் போன்றோர் தெரிவிப்பதைத் தவிர்க்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழில் தேசியகீதம் பாடப்பட்டமை நல்லாட்சியினை எடுத்துக்காட்டுகிறது

Read More