கிழக்கில் இந்து ஆலயங்கள் விஷமிகளால் அழிப்பு

கிழக்கு மாகாணத்தில் அடையாளம் தெரியாத நபர்களினால் இந்து ஆலயம் ஒன்றில் சிலை தூக்கி வீசப்பட்டுள்ளது.

அத்துடன் மற்றுமோர் ஆலயத்தில் கோபுர கலசமும் சேதமாக்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் திருகோணமலை மாவட்டம் நிலாவெளிப் பகுதியிலுள்ள கூழாவடி பிள்ளையார் ஆலயம் மற்றும் பத்தினி அம்மன் ஆலயம் ஆகியவற்றின் மீது இந்த தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளது.

இதேவேளை, கூழாவடி பிள்ளையார் ஆலயத்தில் மூலஸ்தானத்திலிருந்த பிள்ளையார் அகற்றிய இந்த நபர்கள் அதனை அருகாமையிலுள்ள காணியொன்றுக்குள் வீசி விட்டு சென்றுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் (03) அதிகாலை வழமை போல் ஆலய பணிக்கும் வழிபாட்டுக்கும் சென்றிருந்த பெண்ணொருவர் சம்பவம் தொடர்பாக நிர்வாகத்தினருக்கு தெரியப்படுத்தியுள்ளார்.

இந்த சம்பவத்தில் பத்தினி அம்மன் ஆலயம் மீதான தாக்குதலின் போது ஆலயத்தின் கோபுர கலசம் சேதமாக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவங்களை பொறுத்தவரை தமது பகுதியில் இனங்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தும் பின்னணியில் நடைபெற்றிருக்கலாம் என பிரதேச மக்கள் கூறியுள்ளனர்.சம்பவங்கள் தொடர்பாக ஆலய நிர்வாகங்களினால் பொலிஸில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளன.

மேலும் கடந்த டிசம்பர் மாதம் 18ஆம் திகதி மட்டக்களப்பு மாவட்டத்தில் நடைபெற்ற இது போன்ற சம்பவமொன்றின் போது வாகனேரி ஸ்ரீ சத்தி விநாயகர் ஆலயமும் தாக்கப்பட்டு பிள்ளையார் சிலை தகர்க்கப்பட்டு உடைக்கப்பட்டும் உடைமைகள் சேதமாக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

  திருகோணமலையில் துப்பாக்கிகளுடன் நால்வர் கைது

Read More