கிழக்கில் 5 தமிழ் மாணவர்கள் கொல்லப்பட்டு 10 ஆண்டுகள்: நீதி கிடைக்கவில்லை

இலங்கையின் கிழக்கே திருகோணமலை நகரில் சீருடையினரால் ஐந்து தமிழ் மாணவர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் இடம் பெற்று இன்று திங்கட்கிழமையுடன் 10 ஆண்டுகள் முடிவடையும் நிலையில் இதுவரையில் நீதி கிடைக்கவில்லை என சமூக ஆர்வலர்களும் மனித உரிமைசெயற்பாட்டாளர்களும் தெரிவிக்கின்றனர்.

விடுதலைப்புலிகளுக்கும் இலங்கை அரசாங்கத்திற்குமிடையில் உள்நாட்டு யுத்தம் உச்சமடைந்திருந்த வேளை இடம்பெற்றிருந்த இந்த சம்பவமானது மிக மோசமான மனித உரிமை மீறல் சம்பவங்களில் ஒன்று என உள் நாட்டிலும் சர்வதேச ரீதியிலும் தொடர்ந்து பேசப்படுகின்றது.

சர்வதேச மன்னிப்பு சபை உட்பட சர்வதேச மனித உரிமை அமைப்புகளும் மனித உரிமைச் செயற்பாட்டாளர்களும் இலங்கை அரசு மீது வன்மையான கண்டனத்தை அவ்வேளை வெளியிட்டிருந்தனர்.

ஐ. நா மனித உரிமை பேரவையிலும் இந்தப் படுகொலை இலங்கைக்கு எதிரான மனித உரிமை மீறல்கள் தொடர்பான குற்றச்சாட்டுக்களில் இடம்பெற்று விவாதிக்கப்பட்டிருந்தது.


திருகோணமலையிலுள்ள பிரபல பாடசாலையொன்றின் மாணவர்களான இவர்கள், பாடசாலை கல்வியை முடித்த பின்னர் பல்கலைக்கழக உயர் கல்விக்கான அனுமதியை எதிர்பார்த்துக் கொண்டிருந்தவர்கள் என கூறப்படுகின்றது .

2006ம் ஆண்டு ஜனவரி மாதம் 2ம் திகதி மாலை திருகோணமலை கடற்கரை பகுதியில் பொழுது போக்குக்காக கூடியிருந்தவேளை இந்த மாணவர்கள் ஆட்டோவொன்றில் வந்த ஆயுததாரிகளினால் அழைத்துச் செல்லப்பட்டு காந்தி சிலை சுற்று வட்டத்திற்கு அருகாமையில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டனர்.

நாட்டை விட்டு வெளியேறிய குடும்பங்கள்

2006ம் ஆண்டில் இடம் பெற்றிருந்த இந்த படுகொலை சம்பவம் தொடர்பாக சந்தேக நபர்கள் எவரும் உடனடியாக கைது செய்யப்படவில்லை . கடந்த அரசாங்கத்தின் பதவிக் காலத்தில் சர்வதேச ரீதியான அழுத்தங்கள் காரணமாக 7 வருடங்களின் பின்னரே அதாவது 2013ம் ஆண்டுதான் சிறப்பு அதிரடிப்படையை சேர்ந்த உதவி போலிஸ் அத்தியட்சகரொருவர் உட்பட 12 பேர் குற்றப்புலனாயவுத் துறையினரால் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டனர்.. திருகோணமலை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் வழக்கும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தற்போது சந்தேக நபர்களுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது குறித்த மாணவர்களில் ஒருவரது குடும்பத்தை தவிர்ந்த ஏனையோரின் குடும்பங்கள் உட்பட அநேகமான சாட்சிகள் தமது பாதுகாப்பு நிமித்தம் தற்போது நாட்டை விட்டு வெளியேறி விட்டனர்.

சம்பவம் இடம் பெற்று 10 வருடங்கள் கடந்து விட்டாலும் திருகோணமலை மாவட்டத்தில் இடம் பெற்ற மனித படுகொலை சம்பங்களில் இந்நிகழ்வும் மறக்க முடியாத ஒரு அத்தியாயமாகவே மனித உரிமை செயற்பாட்டாளர்கள் , சமூக ஆர்வலர்கள் உட்பட பலராலும் கருதப்படுகின்றது.

 

  

  

எழுக தமிழ் எழுச்சி பேரணிக்கு கிழக்கு பல்காலைக்கழக மாணவ சமூகம் முழு ஆதரவு (காணொளி)

Read More