போராட்டத்துக்கு தயாராகுமாறு பகிரங்க அழைப்பு! ஞானசார தேரர் (காணொளி)


புதிய அரசியல் யாப்பினால் நாடு பிளவடையப்போகின்றது அதனால் நாம் அனைவரும் ஒன்று திரண்டு மாபெரும் எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட வேண்டும் என ஞானசார தேரர் அழைப்பு விடுத்துள்ளார்.

முகநூல் மூலமாக அனைவருக்கும் ஓர் அவசர அழைப்பு என்ற வகையில் இவர் காணொளி ஒன்றினை நேற்று வெளியிட்டுள்ளார்.

குறித்த காணொளி மூலமாகவே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். மேலும் அவர் அதில் தெரிவித்துள்ளதாவது,

இந்த நாடு மிகப்பெரிய பாதிப்பினை சந்திக்கப்போகின்றது. புதிய அரசியல் யாப்பினை கொண்டு வந்து நாட்டை பிளவு படுத்தப் போகின்றார்கள்.

அதேபோன்று நாட்டின் சொத்துகளை வெளிநாட்டவருக்கு விற்கப்போகின்றார்கள். இப்போது நாடு வெளிநாட்டவரின் கட்டுப்பாட்டிலேயே இயங்கி வருகின்றது.

நாட்டின் தலைவர்கள் பௌத்தத்தை தாண்டி செயற்பட்டு கொண்டு வருகின்றார்கள். இவற்றிற்கு எதிராக நாம் பகிரங்கமாக போராட்டம் செய்ய வேண்டும்.

புதிய அரசியல் யாப்பை முறியடிக்க வேண்டும். அதேபோன்று நாடு அந்நியர் கைகளுக்கு செல்வதை தடுக்க ஒன்றிணைய வேண்டும்.

அதற்காக ஜனவரி 7ஆம் திகதி நுகேகொடையில் “நாட்டிற்கு கை வைக்க வேண்டாம்” என்ற தொணிப்பொருளில் மாபெரும் எதிர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட உள்ளது.

முகநூல் நண்பர்கள் அனைவரும் இதனை ஏனையவர்களுக்கு தெரியப்படுத்துவதோடு அந்த போராட்டத்தில் இணைந்து கொள்ள வேண்டும் எனவும் ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை புதிய அரசியல் யாப்பிற்கு எதிராக தென்னிலங்கையில் அரசிற்கு எதிரான சக்திகளும் பௌத்த பிக்குகளும் ஒன்று திரண்டுள்ளனர்.

இதனால் புதிய அரசியல் யாப்பிற்கு எதிராக மக்களையும் திசை திருப்பி மாபெரும் போராட்டங்கள் நடத்த ஆயத்தப்பாடுகள் நடைபெற்று வருகின்றமையால் அரசிற்கு பாரிய நெருக்கடிகள் ஏற்படக் கூடும் எனவும் கூறப்படுகின்றது.

குருக்கள்மடம் ஸ்ரீ கிருஷ்ணன் ஆலய புனராவர்த்தன மகாகும்பாபிஷேக குடமுழுக்குப்பெருவிழா

Read More