மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கம் அவர்களின் 11 வது ஆண்டு நினைவு நாள்.

காலத்தை வென்று வாழும் மனிதவுரிமைக் காவலன் மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கம் அவர்களின் 11 வது ஆண்டு நினைவு நாள்.

“நெருதல் உளளொருவன் இன்றில்லை எனும் பெருமை உடைத்து இவ்வுலகு.”வள்ளுவன் தீர்க்கதரிசனம் மெய்ப்படும் வண்ணம் வாழ்வையே வரலாறாக்கி வையத்தில் வாழும் தமிழர்

நெஞ்சங்களில் நிலைத்துவிட்டவர் மாமனிதர் ஜோசப்  பரராஜசிங்கம். உலகமெலாம் கொண்டாடி மகிழும் ஓர் உன்னதமான திருநாளில் தேவன் கோயில் சந்நிதானத்தில் இந்தப் பெருந்தகை தன்னுயிரை நமக்காக ஈந்தார். எவ்வெவ்விடமெலாம் மனித குலத்திற்குப் பாதுகாப்பானவைகள் என்று வகுக்கப்பட்டதோ அவ்வவ்விடமெலாம் தமிழர்க்குப் பாதகமானவை என்பது தமிழர் விடுதலைப் போராட்ட வரலாற்றில் இரத்தம் தோய்ந்த அத்தியாயங்கள். அடைக்கலம் தரும் ஆலயங்களும் கொலைக்களமானது துரதிஷ்டமே!

பத்தாண்டுகள் உருண்டோடிவிட்ட நிலையில் இந்தப் பதினோராம் ஆண்டில் ஓர் திருப்பத்தை நாம் காண்கிறோம். இப்பேற்பட்ட படுகொலைகளுக்கெல்லாம் எங்கே நீதி கிடைக்கப்போகிறது என்று நாமெல்லாம் நினைத்துக்கொண்டிருக்கும் வேளையில் இப்படுகொலை நீதி விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருக்கிறது. பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைப்பதும் பாதகம் செய்தவர்கள் தண்டனை பெறுவதும் நல்லிணக்கத்திற்கான நடவடிக்கையாகும்.

1934 ஆம் ஆண்டு கார்த்திகைத் திங்கள் 26 ஆம் நாள் இந்த மண்ணிலே தோற்றம் பெற்றார். மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரியிலே கல்வி கற்று தமிழ் ஆங்கிலம் ஆகிய மொழிகளிலே தேர்ச்சிபெற்று சிறந்த ஆளுமைமிக்கவராக உருவானார். 

ஆங்கிலமொழி ஆசிரியராகக் கல்விச் சேவைக்குள் கால்பதித்தவர் பின்பு படவரைஞராகப் பதவி பெற்று மட்டக்களப்பு கச்சேரியில் பணிபுரிந்தார். சினிமாத்துறை வாணிபத்தில் ஈடுபாடு கொண்டு மட்டுநகரிலே “சுபராஜ்” எனும் சினிமா அரங்கமைத்து அதிலும் சிறப்புற்றார். அப்படியே வாழ்வைத் தொடர்ந்திருந்தால் மட்டக்களப்பில் அவர் கோடீஸ்வரனாக வாழ்ந்திருப்பார்.

வாழும் போதே அவருக்குள் தமிழ்மொழிப் பற்றும் தமிழின உணர்வும் வளர்ந்தது. அதனால் தந்தை செல்வாவின் அரசியல் பாசறையில் தன்னை இணைத்துக் கொண்டார். தமிழ்த் தேசிய அரசியல் மலர்ப் படுக்கையல்ல அதுவோர் முட்படுக்கை என்றறிந்தும் அவ்வரசியலை முழுமனதோடு ஏற்றுக்கொண்டு நெருப்பாற்றைக் கடக்க முன்வந்தார். 

பொதுவாக அரசியல் வாழ்விலே தங்களை ஈடுபடுத்திக் கொள்வோர்க்கு துணைவிமார் துணையாகவிருப்பது அரிது. ஆனால் இவருக்கு வாய்த்த மனைவி திருமதி. சுகுணம் ஜோசப் உற்ற துணையாக வாய்த்தது இவர் பெற்ற அதிஷ்டமே! இல்லற வாழ்வோடு அரசியல் வாழ்வும் களைகட்டியது. தனிச் சிங்கள மொழிச் சட்டத்தை எதிர்த்து 1956 ஆம் ஆண்டு தந்தை செல்வா அவர்கள் தமிழ் தேசம் தழுவிய மிகப் பெரிய அறவழிப்போரை ஆரம்பித்த அன்றைய நாளில் அவர்களது திருமணம் நடைபெற்ற போதும் அந்த அறப்போரில் இருவரும் களமாடி மகிழ்ந்தார்கள் என்றால் அவர்கள் கொண்டிருந்த இனப்பற்றை என்னவென்று சொல்வது!

மட்டக்களப்பிலே உருவான தமிழ் இளைஞர் பேரவையின் தலைமைப் பொறுப்பையேற்று அரசியலிலே சூறாவளியாக மாறினார். 1972 இல் இலங்கை குடியரசாகிய காலப்பகுதியிலே தமிழர் அரசியல் தீவிரமானது. பெரும் நெருப்பாக மூண்டது. அந்த வெட்கை தாங்கமுடியாது அப்போது மட்டக்களப்பு மாவட்ட அரசியல் அதிகாரியாகப் பதவி வகித்தவர், மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கம் அவர்களை நுவரெலியா மாவட்டத்திற்குத் தூக்கியெறிந்தார். ஆனால் அவரோ பதவியைத் தூக்கியெறிந்து முழுநேர அரசியலுக்குள் இறங்கினார்.

மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கம் அரசியல் வாழ்வில் பாரிய சவால்களை எதிர்கொண்டார். இந்திய அமைதிகாக்கும் படைகள் இலங்கையில் நிலைகொண்டிருந்த காலத்தில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் போட்டியிட்டார் என்பதற்காக விடுதலைப் புலிகள் அவரை அழைத்துச் சென்றார்கள். அவர் அளித்த விளக்கத்தில் ஆறுதலடைந்து அவரை விடுவித்தார்கள். 2004 இலே விடுதலைப் புலிகள் பிளவு பட்டபோது இங்கு நிலைகொண்ட பிரிவினர் வடகிழக்கு அரசியலைக்கைவிடச் சொன்னார்கள். 

நீங்களெல்லாம் உருவாகும் முன்பே தமிழர் அரசியலிலே தந்தை செல்வாவின் அரசியலை எனக்குள் வரித்துக் கொண்டவன் வடகிழக்கென்ற தமிழ்த் தேசிய அரசியலிலிருந்து இம்மியளவும் என்னால் விலக முடியாது என்று நேருக்குநேர் நின்று பதிலுரைத்தார்! அன்றிலிருந்து பாரிய கொலை அச்சுறுத்தல்களுக்கு ஆளானார்.

இவ்வாறான எதிர்ப்பலைகளின் மத்தியிலே நடைபெற்ற பொதுத் தேர்தலில் வெற்றி வாய்ப்பையும் இழந்தார்.

ஆனாலும் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினரானார். தமிழர் விடுதலைக் கூட்டணியின் சிரேஷ்ட உப தலைவராகச் செயற்பட்ட அக்காலப் பகுதியில் பாராளுமன்றத்தில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் பிரதம கொறடாவாகவும் பணியாற்றினார்.

விடுதலைப் போராட்டம் உக்கிரமடைந்திருந்த காலப்பகுதியில் தமிழினம் பல படுகொலைகளைச் சந்தித்திருந்தது. அத்தனை படுகொலைகளையும் சர்வதேசம் அறிந்து கொள்ளும் வண்ணம் செயற்பட்டார். சர்வதேச மனிதவுரிமை அமைப்புக்களோடு நெருக்கமான உறவுகளைப் பேணி அவ்வமைப்புக்களின் நல்லெண்ணத்தைப் பெற்றிருந்ததனால் அத்தனை அநியாயங்களையும் சர்வதேச மனிதவுரிமை அமைப்புக்களுக்கு அறியவைத்த தமிழினத்தின் மனிதவுரிமைக் காவலனாக அவர் அறியப்பட்டார்.

அவர் கொடுத்த அழுத்தம் காரணமாகவே கொக்கட்டிச்சோலைப் படுகொலைகளை விசாரிக்க அப்போதிருந்த ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாச அவர்கள் விசாரணைக்குழுவை அமைத்து விசாரணைகளை மேற்கொண்டார். மத்திய முகாம் பகுதியிலே கோணேஸ்வரி என்ற தமிழ்ப் பெண் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு அவரது பெண்ணுறுப்பினுள் குண்டு வைத்து சிதைக்கப்பட்ட கொடூரமறிந்து கொதித்தெழுந்தார். உலகரங்கிலே மட்டுமல்லாது இங்கும் மிகவும் காரசாரமாகக் கண்டித்துக் குரலெழுப்பினார். அதன் நிமித்தம் அந்த விசாரணை நடைபெற்ற நீதிமன்றச் சாட்சிக் கூண்டில் மண்ணுக்கு விடைகொடுக்கும்வரை ஏறி இறங்கிக்கொண்டிருந்தார் என்பது குறிப்பிடக்கூடிய அம்சமாகும்.

பாராளுமன்றப் பிரவேசம்.1989 இல் நடைபெற்ற பொதுத்தேர்தலில் தோல்வியடைந்தபோதும் இடையிலே ஏற்பட்ட ஒரு வெற்றிடத்தினால் அவர் பாராளுமன்றப் பிரதிநிதியானார்.அவர் ஆற்றிய அளப்பரிய மக்கள் சேவையினால் 1994 ஆம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்றப் பொதுத் தேர்தலில் 48000 வாக்குகளுக்கு மேல் பெற்று மட்டக்களப்பின் முதலாவது பாராளுமன்றப் பிரதிநிதியாக மக்களால் தேர்வு செய்யப்பட்டார்.

மூன்று மொழிகளிலும் விற்பன்னர். மொழி ஆளுமைமிக்கவர். தமிழ் அரசியல் சார்ந்தவராக இருந்தபோதும் அனைத்துக் கட்சித் தலைவர்களினதும் நன்மதிப்பைப் பெற்றார். பாராளுமன்ற உறுப்பினர்கள் என்றல்லாமல் அமைச்சர்கள் பிரதமர் ஜனாதிபதி உள்ளிட்ட அனைவரும் இவரிடம் குறிப்பிடத்தக்க மரியாதை கொண்டிருந்தார்கள். அவர் ஆற்றிய பாராளுமன்ற உரைகளை முழுப்பாராளுமன்றமும் உன்னிப்பாக அவதானித்தது. 

தனிப்பட்ட வாழ்க்கையிலும் உயரிய பண்புகளைக்கொண்டு விளங்கினார். அவரது இறுதிப் பயண நிகழ்வின் போது நடைபெற்ற அஞ்சலி நிகழ்வில் பங்கெடுத்த அனைவரும் ஆற்றிய உரைகள் அவரொரு சிறந்த மக்கள் தலைவன் என்பதை வெளிப்படுத்தின.

ஊடகவியல் பங்களிப்பு இயல்பாகவே அவரிடமிருந்த எழுத்து வல்லமையோடு பத்திரிகைத் துறையினுள்ளும் தன்னைச் சேர்த்துக்கொண்டு இதழியல் சேவையைத் தொடர்ந்தார். “சுகுணம் ஜோசப்” என்ற நாமத்தில் அப்போது பிரபல்யமாக விளங்கிய தினபதி சிந்தாமணி போன்ற பத்திரிகைகளில் பத்திகள் புனைந்தார். ஆய்வுகள் நிறைந்த பத்திகள் அனைவரதும் பெரும் வரவேற்பைப் பெற்றன என்பது குறிப்பிடத்தக்கது.

எழுதுவதோடு விட்டுவிடாமல் கிழக்கிலங்கைப் பத்திரிகையாளர் சங்கம் கண்டு அதன் தலைவராகப் பணிபுரிந்து இதழியல் சேவையின் உயர்வு கண்டவர். 71 ஆண்டுகள் இம்மண்ணிலே தமிழர்க்காக வாழ்ந்து தமிழ் மண்ணிலே வித்தாகிய மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கம் பல்லாளுமை கொண்ட மக்கள் தலைவன். இப்பேர்ப்பட்டவிசுவாசமிக்க தலைமையைப் பறிகொடுத்த தேனாடு அப்படியொரு தலைவன் வருகைக்காகக் காத்திருக்கிறது.

வே.தவராஜா
ஆரையம்பதி – 03

  

  

  

  

  

தியாக தீபம் அன்னை பூபதி

Read More