தமிழ்த் தேசியத்துக்கு உரமூட்டிய இன்குலாப்பும் , அதை உடைக்க முயலும் சிவசேனாவும் !

நன்றி மறைவாக இனம் தமிழர் என்பது மீண்டுமொரு முறை  உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 12 /12 /2016 அன்று நாவலர் மண்டபத்தில்  கவிஞர் இன்குலாப் அவர்களுக்கான நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றது. ஒடுக்குமுறைக்குள்ளாகுவோருக்காக சொல்லிலும், செயலிலும்,எழுத்திலும் போராடிவந்தவர் இவர். அந்த வகையில்   ஈழப் போராடடத்தையும் ஆதரித்தவர். " ஏழு கடல்களும் பாடட்டும், ஒப்புக்குப் போர்த்திய அமைதித்திரையின் ஓரங்கள் பற்றி எரிகின்றன,கானம் ரத்த கானம்" முதலான உணர்வு பூர்வமான பாடல்களை எழுதியவர்.    

எந்த மூலையில் விசும்பல் என்றாலும்
 என் செவிகளிலே எதிரொலி கேட்கும்
 கூண்டில் மோதும் சிறகுகளோடு
 எனது சிறகிலும் குருதியின் கோடு! - இது "ஒவ்வொரு புல்லையும்" என்ற தலைப்பில் வெளியான கவிதைத் தொகுப்பில் காணப்படும் ஒரு பகுதி.
" சமயம் கடந்த மானிடம் கூடும்
சுவரில்லாத சமவெளிதோறும்
குறிகளில்லாத முகம்களில்  விளிப்பேன்
மனிதம் என்றொரு பாடலை இசைப்பேன் " என்ற வரிகளை எழுதிய இவரை சமாதான காலத்தில்  நடைபெற்ற "மானிடத்தின் ஒன்று கூடல் " மகா நாட்டுக்கு அழைத்தமை மிகப்பொருத்தமே. இவரது நினைவேந்தல் நிகழ்வில்  " மனுஷங்கடா ! நாங்க மனுஷங்கடா " என்ற   பாடல் பறை ஒலியுடன் இணைந்து ஒலித்தது. இவர் ஒரு இஸ்லாமியர் ஆனால் இவர் தான் பிறப்பால் ஒரு மனிதர். மதத்தால் இஸ்லாமியன் இனத்தால் நான் தமிழன் எனக் கூறுவதுண்டு. இந்திய இராணுவ காலத்தில் நிதர்சனம் பொறுப்பாளராக இருந்த பரதன் பிரபல ஊடகவியலாளர் ஒருவருடன் இவருடைய இல்லத்திற்குச் சென்றார்.    இவர்களைச் சாப்பிடப் அழைத்தார் இன்குலாப். அவ்வேளை பரதன் அந்த ஊடகவியலாளரைச்  சுட்டிக் காட்டி " இவர் சைவ உணவுக்காரர் என்கிறார், அடடே ! புல்லுச் சாப்பிடும் புலியும் இருக்கிறதா ? " என நகைச்சுவையுடன் கேட்டார் இன்குலாப். உடனே கடையில் புதிதாக பாத்திரங்கள் வாங்கி தோசை செய்து கொடுக்க ஏற்பாடு செய்து கூடவே தானும் இருந்து சாப்பிட்டார். அடுத்தவர்களின் மன உணர்வுகள், பழக்க வழக்கங்கள்,இயல்புகளை மதித்துச் செயல்படும் இனிய பண்பாளர் இவர் .       
மானுடத்தின் ஒன்று கூடல் நிகழ்வின் போது கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது. தமிழகத்தில் இருந்து வந்த கலைஞர்கள்,எழுத்தாளர்களும் இலங்கைக் கலைஞர்களும் இதில் கலந்து கொண்டனர். இதில் கவிஞர்  காசிஆனந்தனைப் பற்றிக்  குறிப்பிட்டார் இவர்.
"பாரதி தாசனின் வாரிசு காசி"  என சில வரிகளை உதாரணம் காட்டினார். அதற்கு எமது எழுத்தாளர் ஒருவர்  " அது எப்படி கூறமுடியும்?  பாரதிதாசன் குரு பாரதியார் ; பாரதியாரின் குரு யாழ்ப்பாணத்துச்  சுவாமிகள் தானே. அதைத் தனது குருஸ் துதியில் குறிப்பிட்டிருக்கிறாரே? " எனக் கூறினார்.  அத்துடன்
குவலயத்தின் விழிபோன்ற யாழ்ப்பாணத்தான்,
தேவிபதம் மறவாத தீர ஞானி,
சிதம்பரத்து நடராஜ மூர்த்தியாவான்
 பாவியரைக் கரையேற்றும் ஞானத் தோணி, என்றும் இன்னொரு இடத்தில்
"மங்களஞ்சேர் திருவிழியா வருனைப் பெய்யும்
வானவர் கோன் யாழ்ப்பாணத் தீசன்நன்னைச்
சங்கரனென் நெப்போது முன்னே கொண்டு
சரணடைந்தாவது  கண்டீர் சர்வ சித்தி "   எனவும்  குறிப்பிட்டுள்ளார். அத்துடன் பாரதியாரின் குருவின் சமாதி பாண்டிச்சேரியில் உள்ளதாகவும் குறிப்பிட்டார். "இவ்வளவுவிஷயம் இருக்கிறதா? நாங்கள் மேலோட்டமாகத்தான் பாரதியாரின் கவிதைகளை படித்துள்ளோம் நீங்கள் அதற்குள் ஆழமாகப் போயுள்ளீர்களே"என வியந்தார் இன்குலாப்.
இந்த விஜயத்தின் போது தலைவர் பிரபாகரனையும் அவர் சந்தித்தார். தனது மனதில் பட்ட  சகல விடயங்கள் தொடர்பாகவும் கலந்துரையாடினார். வடக்கிலிருந்து முஸ்லிங்களின் வெளியேற்றம் நிகழ்ந்து கொண்டிருந்த சமயத்தில் கவிஞர் புதுவை இரத்தினதுரை " இன்குலாப்பின் முகத்தில் இனி எப்படி விழிப்பது?" என வருந்தினார். யாழ்ப்பாணத்துக்கு வந்த பின்னர் " முஸ்லிங்கள் தங்களை மொழிவழியாக அடையாளப்படுத்திக் கொள்ளவேண்டும் " எனக் கூறினார் இன்குலாப் . இவரது நினைவேந்தல் நிகழ்வில் உரையாற்றிய வட மாகாண  விவசாய அமைச்சர்  பொ.ஐங்கரநேசன் இறுதி யுத்தத்தின் பின்னர் இவர்  ஈழத் தமிழருக்கு எந்தெந்த வகையிலெல்லாம் உதவினார் என எடுத்துரைத்தார் .        
" ஈழத் தமிழர்களைத் காக்க இந்திய அரசு தவறிவிட்டதாகத் தெரிவித்துத் தனக்கு அளிக்கப்பட்ட கலைமாமணி விருதைத் திருப்பி அளித்து அரசின் பொறுப்பற்ற போக்குக்குத் தனது எதிர்ப்புணர்வைக் காட்டியவர் இன்குலாப்."  என கோக்கன்   என்ற பெயரில் ஒருவர் புதுவிதி பத்திரிகையில் சுட்டிக் காட்டினார்.
 
இன ஒற்றுமையின் மையமாகத் திகழ்ந்தது யாழ்ப்பாணம். குறிப்பாக ஏனைய மதங்களை  மதிக்கும் போக்கு இங்கே இருந்தது. சட்டத்தரணி  நல்லூர் நாதன் என்பவர் உதயன் பத்திரிகையில் எழுதிய கட்டுரையில் " குவாசி எம் .எம் .சுல்தான்  (ஜே .பி .யு .எம் ) யாழ்ப்பாண மாநகர சபையின் 12 ஆம்  வட்டார அங்கத்தவராகவும் 1955 இல் யாழ்ப்பாண மேயராகவும் இருந்தவர். 1950 இருந்து தேர்தல்களில் வெற்றிபெற்றவர். 15  அங்கத்தவர்களைக் கொண்ட மாநகர சபையில் இரண்டே முஸ்லீம் அங்கத்தவர்கள் இருந்தும், சிலரது கல்வித் தகைமை, கண்ணியம் , நேர்மை காரணமாக மேயராகத் தேந்தெடுக்கப்பட்டார்.தமிழ் முஸ்லீம் உறவின் சாட்சியமாகக் கிடைத்த்  மேயர் பதவியானது. யாழ் மாநகர சபை வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயமாகும்" எனக்குறிப்பிட்டுள்ளார்.
         
மேல் நீதிமன்ற நீதிபதியாக  இருந்த மர்ஹிம் எம் .எம் .அப்துல் காதர் ஒரு கட்டுரையில் ( அம்பிகை பாகன் பாராட்டு மலர்  1968 ) பின்வருமாறு கூறுகின்றார்." அந்தக்காலத்தில்  யாழ்ப்பாண முஸ்லிம்களில் பலர் வைத்தீஸ்வரா வித்தியாலயத்தில் அம்பிகை பாகன் அதிபரின் கீழ்தான் கல்வி கற்றிருக்கிறார்கள். அந்தக் காலத்தில் சைவப் பிள்ளைகளுக்கு சமய பாட ஆசிரியர் இருந்த போல முஸ்லீம் மாணவர்களுக்கு ஓர் ஆசிரியர் தானும் இருக்கவில்லை.முஸ்லீம் பிள்ளைகளின் சமய பாட நேரம் வீணாக்க கழிவதை அம்பிகை பாகனால்  பார்த்துக் கொண்டிருக்க முடியவில்லை. சமய பாட அறிவில்லாமல் அவர்கள் ( பாடசாலையை விட்டு விலகும் போது ) வெளியேற்றப் போகிறார்களே என்ற கவலை அவரை வாட்டவே , தமது பாடசாலையில் இருந்து ஆசிரியர் ஒருவரைப் பிறிதொரு பாடசாலைக்கு கொடுத்து, அங்கிருந்து இஸ்லாம் பாட ஆசிரியரொருவரை எடுத்து  சைவப் பிள்ளைகளைப் போல முஸ்லீம் பிள்ளைகளும் இஸ்லாம் கற்க வசதி செய்து கொடுத்தார்  என அறிகிறோம்.
இதனால் 1942 இல் நடைபெற்ற மூத்த தராதரப் பத்திர பரீட்சையில் இஸ்லாம் பாடத்தில் உயர் சித்தியுடன் நூறு வீத சித்தியை அந்த மாணவர் காட்டினார்.  
             
யாழ்ப்பாணத்தவர் பிள்ளையாருக்கும் காணிக்கை செலுத்துபவர்.நாகூர்  ஆண்டவருக்கும் செலுத்துபவர். தமிழர் சிலர் பிள்ளையாருக்குச் செலுத்துவதைவிட நாகூர் ஆண்டவருக்கு  கூடுதலாகச்  செலுத்துவர்.அதே போல சில முஸ்லீம் கடைகளில் நாகூர் ஆண்டவருக்குச் செலுத்துவதை விடப் பிள்ளையாருக்குச் செலுத்துவர்.   
 புங்குடுதீவில் இருந்த சர்வமத சங்கத்தில் ஹஜ்ஜீப்  பெருநாளும் , கிறிஸ்மஸ்சம், தீபாவளியும் கொண்டாடப்படுவதுண்டு எல்லா விசேட தினங்களிலும் தானம் வழங்கப் படுவதுண்டு  எழுத்துலகில் பிரபலமான மு .தளையசிங்கம் ,மு . பொன்னம்பலம், கவிஞர் சு .விஸ்வரத்தினம்  போன்றோர் இச் சங்கத்தில் அங்கம் வகித்த்வர்களே.   
  சமாதான காலத்தில் யாழ் .பல்கலைக் கழக முன்றலில் உள்ள சத்ய சாயிபாபா நிலையத்தில் நபிகள் நாயகத்தின் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது . ஒஸ்மானியாக் கல்லூரி அதிபரும் , மாணவர்களும் இதில் கலந்து கொண்டனர்.
சிரித்திரன் சுந்தர் என அழைக்கப்படும் சிவஞானசுந்தரம் வாழும் காலத்திலேயே " மாமனிதர் "  என்று தேசியத்தலைவரால் கௌரவிக்கப்பட்டவர்." சிரித்திரன் சித்திரக் கொத்து " என்ற நூலுக்காக கொழும்பு அரசு அளிக்க இருந்த சாஹித்திய மண்டலப் பரிசை  நிராகரித்தவர்."
  குண்டில் நிழலில் பரிசா? எனக் கேள்வி எழுப்பியிருந்தார். இவர் காங்கேசன்துறை வீதியில் இருந்து நாவாந்துறைக்கு நடந்து செய்வதுண்டு அப்போது பேச்சுத் துணைக்கு  யாரையாவது கூட்டிச் செல்வார். ஒரு நாள்  
  சாந்தையர் மடம் ,கற்பக விநாயகர் ஆலயத்திலிருந்து
" முருக என்றழைக்கவா
முத்துக்குமரா என்றழைக்கவா "
என்ற பாடல் ஒலிபெருக்கியில் பாடிக்கொண்டிருந்தது .அதனை ரசித்தபடியே ஐந்து சந்தியை  அண்மித்த அவர் " நாங்கள் இப்போது பாகிஸ்தானுக்குள் நுழைய போகிறோம் " என்றார்.   அவ்வேளை அங்குள்ள ஒரு கடையிலிருந்து
" பள்ளிகள் பல இருந்தும்
பாங்கோசை கேட்ட பின்பும்  
பள்ளி செல்ல மனமில்லையோ
படைத்தவன் நினைவில்லையோ " என நாகூர் ஈ .எம் ஹனிபாவின் பாடல் ஒலித்தது. அதனையும் ரசித்துக்கொண்டு சென்றார் சுந்தர்.
அடுத்து  நாவாந்துறைக்குள் நுழையும் போது " நாங்கள் இப்போது இஸ்ரேலுக்குள் பிரவேசிக்கப் போகிறோம் "  என்றார். அங்குள்ள ஒரு கடையில் இருந்து
" எனை ஆளும் மேரி மாதா
துணை நீயே மேரி மாதா என்ற பாடல் ஒலித்தது அத்தனையும் ரசித்தார் சுந்தர் . குறிப்பிட்ட இவ்வளவு தூரத்துக்குள் மூன்று வெவ்வேறான பாடல்களும் ஒலித்தமையைச் சுட்டிக் காட்டினார். " எல்லோரும் ஒவ்வொருவிதமாகப் பாடுகின்றனர். எல்லாவற்றையும் கடவுள் ஏற்றுக்கொள்வார். பாடும் வரிகள் வேறு வேறாக இருந்தாலும்  எல்லாமே தன்னைப் பற்றியது தானே என நினைப்பார் .  ஏனெனில் கடவுள் என்பவர் ஒருவர் தானே " எனக்குறிப்பிட்டார்.  
கிளிநொச்சி கனகபுரம் தேவாலய பெருநாளுக்கு இந்துக்களே மரக்கறி, பணம் முதலியவற்றைச் சேகரித்துச் சமைத்து காலை உணவைக் கொண்டுபோய்க் கொடுப்பர். ஆராதனை முதலான விடயங்களில் கிறிஸ்தவர்களும் முழுமையாக ஈடுபட வேண்டுமென்பதற்காக  ஏனைய பணிகளை இந்துக்கள் பொறுப்பேற்பது வழக்கம் .   
  இன்று சிவசேனா என்றொரு குளுவன் வடக்கு - கிழக்கில் நுழைந்துள்ளது. இதன் ஒரு கொம்பு வடக்கில் கிறிஸ்தவர்களை மோத விழைகிறது. மறு கொம்பு கிழக்கில் முஸ்லிங்களை இலக்காகக்  கொண்டுள்ளது. ஏற்கனவே இந்தக் குளுவன் பம்பாயிலிருந்து தமிழரை முட்டி இரத்தக் காயங்களுடன் தமிழ் நாட்டுக்கு அனுப்பியது. " மகாராஷ்டிரம்  மராட்டியருக்கே " என்பதே அதன் கோஷமாக இருந்தது. அந்தக் குளுவனின் கொம்பிலிருந்து இரத்தக் கறையை மறைத்துவிட்டு `இது மிகவும் சாது`` என விளக்கமளிக்க முயல்கின்றனர் சிலர். சுமார் நாற்பத்தையாயிரத்துக்கு மேற்பட்ட மாவீரர்களினதும், இலட்சக்கணக்கான மக்களினதும் குருதியினால் உரம் பெற்ற தமிழ்த் தேசியத்தை உடைக்கும் நோக்கிலேயே  இது செயற் படுகின்றது. மலேசியாவில் பிறந்த கிறிஸ்தவரான தந்தை செல்வாவைப் போற்றும் வட கிழக்கு மக்களிடையே பேதங்களை ஏற்படுத்தப் படாது பாடுபடுகின்றது.    
    வடக்கில் கிறிஸ்தவர்களுக்கு எதிரான கருத்துக்கள் வெளியிடப்படுகின்றன.கிறிஸ்தவ சிலைகள் தொடர்பாக சில விரும்பாத தகாத நிகழ்வுகள் ஆரம்பித்துள்ளன.குறிப்பாக மன்னார் , வவுனியா மாவட்டங்கள் இலக்குவைக்கப் படுகின்றன.இது நல்லத்துக்கல்ல இப்போதே கூட்டமைப்பு விழித்துக் கொள்ளாவிடில் தமிழ்த் தேசியம் துண்டு துண்டாகும் சிங்களத்தால் செய்ய முடியாததை சிவசேனை செய்துவிடும்.என்று கூட்டமைப்புக்கு கூறப்போனால்  அங்கு நிலைமை தலை கீழாகவுள்ளது. கொடுமை ,கொடுமை என்று கோயிலுக்கு போனால் அங்கெ ஒரு கொடுமை தலை விரித்து  ஆடியதாம்.
 தமிழரசுக் கடசியின் செயலர்,தலைவருக்கு மட்டக்களப்பிலும், அம்பாறையிலும் அளிக்கப்பட்ட வரவேற்பு நிகழ்வுகளில் முஸ்லீம் மதகுரு எவரும் ஆசி கூற அழைக்கப்படவில்லை. இது தந்தை செல்வாவின் கட்சி என்பதை முன்னாள் தமிழ் இளைஞர் பேரவைக்காரர்களான மாவையும் , கி . துரைராஜசிங்கமும் மறந்து வெகுநாட்களாகி விட்டன அதனால் தான் " இரண்டில் ஒன்றைத் தெரிவு செய்க " என்று அரை நூற்றாண்டுக்கு மேலாக தமிழரசுக் கட்சிக்காரராக இருக்கும்  பேராசிரியர். சி .க . சிற்றம்பலத்துக்கு கடிதம் எழுதத் தெரிந்த செயலருக்கு சிவசேனாவை கிழக்கில் அழைத்து தமிழ் - முஸ்லீம் மக்களிடையே பேதங்களை ஏற்படுத்த முனையும் யோகேஸ்வரனுக்கு அஞ்சல்  அனுப்ப பேனாவோ,கடித உறையோ,மின் அஞ்சல் முகவரியோ கிடைக்கவில்லை.  
 சிவசேனாவின் நிறுவனர் தமிழகத்தில் தங்கியுள்ளார். இவருக்கு இந்தியக் குடியுரிமை கிடைத்ததாக தெரியவில்லை  தமிழகத்தில் தஞ்சம் புகுந்துள்ள ஈழத் தமிழர்களுக்கு குடியுரிமை கிடைக்கவில்லை விசா காலத்துக்கு மேல் இந்தியாவில் தங்கியிருந்தோர் இலங்கைக்குத் திரும்பினால் மீண்டும் இந்தியாவுக்கு இலேசில் திரும்பித் செல்ல  இயலாது. ஆனால் இவர் நினைத்த போதெல்லாம் இலங்கைக்கு வந்து செல்லக் கூடியதாக இருக்கிறதென்றால் அதன் சூட்சுமம் ஆராயப்பட வேண்டியது. தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் மறைவின் போது சிவசேனாவின் சார்பில் அஞ்சலி செலுத்துவதாக குறிப்பிட்டார்.தனி நபராக அஞ்சலி செலுத்துவது வேறு  சிவசேனாவின் பெயரைக் குறிப்பிட்டதான் மூலம்  பம்பாயிலிருந்து விரட்டப்படடோரின் பரம்பரையினரை ஈழத் தமிழாக்களிடமிருந்து பிரிக்க முயற்சிக்கிறார்  போல இருக்கிறது .
இந்த இயக்கத்தின் சில அறிவிப்புக்கள் யதார்த்தத்துக்கு முரணாகவும், கோமாளித்தனமாகவும் உள்ளன.பிறக்கும் நாலாவது குழந்தைக்குத் தமிழில் பெயர் வைத்தால் பரிசாம்.அதுவும் நிறுவனரின் பிறந்த நாளை முன்னிட்டு இந்த அறிவிப்பாம் . ஒரு பிரபாகரன் காலத்தில் இல்லாததால் எத்தனை பேர் அவரைப்போல இருப்பதாகக் காட்டமுனைகின்றனர். முதல் மூன்று பிள்ளைகளுக்கும் எப்படியும் பெயர் வைக்கலாம் என சொல்லாமல் சொல்லுகிறார்களோ? ஏற்கனவே இங்கு தியாகி அறக்கொடை நிறுவனம்  பிள்ளைகளுக்குத் தமிழில் பெயர் வைத்தால் பரிசு வழங்குகிறது.அது முதலாவது பிள்ளையாக இருந்தாலும் சரி .இதெல்லாம் தெரியாவிட்டால் இவர்களுக்கு இந்த மண்ணில் நடக்கும் நிகழ்வுகளுடன் பரிச்சயம் இல்லை என்பதே பொருள்
அதெல்லாம் போக இப்போது யார் நாலாவது பிள்ளை பெறுகிறார்கள் ? இதன் நிறுவனர் கூடார மடித்துள்ள தமிழ் நாட்டிலேயே இரண்டுக்கு மேல் பெறுவது அரிதாக உள்ளது ....  இந்த அறிவிப்பை யோகேஸ்வரன் வெளியிட்டால் கிழக்கு மக்கள் என்ன நினைப்பர்? எனவே இந்தக் கூத்துகளை  நகைச் சுவையாக எடுத்துக் கொள்வதுடன் விட்டு விட வேண்டும் .  
இனி எவராவது இதன் பெயரை உச்சரித்தால் " பங்களாதேஷில்தான் சிவசேனாவின் சேவை அவசரமாகத் தேவையாக உள்ளது. மூட்டைகளை  கட்டிக்கொண்டு அங்கே புறப்படுங்கள்" என்று கூறுங்கள் ஏனெனில் இங்கு சைவ சித்தாந்தங்களை அறிமுகப் படுத்த ஏராளமானோர். இருக்கின்றனர்.அவர்களில் ஒருவர் அருட் தந்தை மரியா சேவியர் அடிகளார். அவர் சைவ சித்தாந்தத்தில் கலாநிதிப் படடம் பெற்றவர் .  ( PHD )   உப நிடதங்களில் ஒன்றான கேனோப நிடதத்தின் குறுந்தகடு வெளியீட்டு விழா அண்மையில் யாழ் .திருமறைக் கலா மண்டபத்தில் இடம்பெற்றது .    
      இதன் ஞாபக வடிவமும் அன்று அரங்கேற்றப்பட்டது. திரைவிலகியதும் பிரமாண்டமான சிவலிங்கத்துக்கு மலர் தூபி அஞ்சலி செய்வதாக காட்சி ஆரம்பமானது .இதனை அரங்கேற்றியவர் மரியா சேவியர் அடிகளே. நடிகர்களும் பெரும்பாலும் கிறிஸ்தவர்கள். அற்புதமான இக் நிகழ்வைக் கண்டுகளித்த சைவ சமயத்தவர்கள். ஜேசு காவியத்தை கண்ணதாசன் அளித்தது போல் கனோப நிடதத்தை மரியா சேவியர் அடிகளார் அளித்துள்ளார். இதுதான் மத நல்லிணக்கம் . அடிகளுக்கு தமது  நன்றியத் தெரிவித்தனர்.       
 சுனாமி போன்ற பெரும் அவலங்களின் பாதிப்புற்றோர் எந்த மதத்தவர் எனப் பாராது சேவையாற்றியவர்கள் கிறிஸ்தவ நிறுவனங்களும் அதன் தொண்டர்களும். நிறுவனமயப்படுத்தப்பட்ட வேறெந்த நிறுவனங்களோ சைவ குருக்கல்களோ இதில் ஈடுபடவில்லை எனவே இங்கு இருப்பது மிகவும் சகஜமான சூழ்நிலையே .இதனைக் குழப்ப வேண்டாம் என அறிவுறுத்துங்கள் .  

  

  

தமிழனுக்குத் தமிழனே உயிராம் - அந்தத் தமிழனுக்குத் தமிழனே தூக்குக்கயிறாம்.

Read More