மட்டு மாவட்டத்தில் இத் தேர்தல் யாருக்கு சாதகம் ??? மக்கள் களத்தின் ஆய்வறிக்கை

இலங்கை அரசியல் வரலாற்றில் புதியதொரு பரிமாணமாக தடம்பதிக்க விருக்கும் 15வது பாராளுமன்றத் தேர்தல் ஒரு சமராகவே அனைத்து மாவட்டங்களிலும் உச்ச நிலையை எட்டியுள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்திலும் இதன் அலைபட்டி தொட்டியெல்லாம் அடித்துக் கொண்டிருக்கின்றது. மட்டக்களப்பு மாவட்டத்துக்கென உள்ள 05 ஆசனங்களுக்காக 16 அரசியல் கட்சிகள் மற்றும் 30 சுயேட்சைகளிலிருந்து மொத்தம் 368 வேட்பாளர்கள் பந்தயச் சமரில் இறங்கியுள்ளனர்.

ஆனாலும் 04 கட்சிகளே இறுதிச் சுற்றிற்காக மட்டக்களப்பு மாவட்டத்தில் தெரிவு செய்யப்படும். அதாவது விகிதாசார நியமங்களுக்கமைவாக மாவட்டத்தில் 05 வீதத்திற்கு மேற்பட்ட வாக்குகளைப் பெற்றுக் கொள்ளும் வல்லமையை 04 கட்சிகளே பெற்றுக் கொள்ளும். அந்தவகையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், ஐக்கிய தேசிய முன்னணி, தமிழ் தேசியக் கூட்டமைப்பு, ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு ஆகிய 04 கட்சிகளுமே களச்சமரின் இறுதிச் சுற்றில் பங்கெடுக்கும் வல்லமையைக் கொண்டிருக்கும்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட மொத்தவாக்காளர்களின் எண்ணிக்கை 365,167. இதில் சுமார் 89,000 முஸ்லிம் வாக்குகளும் சுமார் 272,000 தமிழ் வாக்குகளும் உள்ளடங்குகின்றன.  2012 இல் வெளியிடப்பட்ட புதிய புள்ளி விபரங்களுக்கு அமைவாக கடந்த ஐனாதிபதித் தேர்தலில் வாக்களிப்பு வீதம் 71% அதாவது 259,166 வாக்குகள் மட்டக்களப்பில் அளிக்கப்பட்டன.

2012 ம் ஆண்டு வெளியிடப்பட்ட புதிய சனத்தொகைக் கணக்கெடுப்புகளிற்கு பிறகு நடைபெறும் முதலாவது பாராளுமன்றத் தேர்தல் எதிர்வரும் 17ம் திகதி நடைபெறுவது குறிப்பிடத்தக்க விடயம். கடந்த பாராளுமன்றத் தேர்தலின் மொத்த வாக்காளர் எண்ணிக்கையுடன் ஒப்பிடும் போது சுமார் 30,000 வாக்காளர்கள் இம்முறை நடைபெறும் பாராளுமன்றத் தேர்தலில் அதிகமாக வாக்களிப்பதற்கான தகுதியைப் பெற்றுள்ளனர்.

இந்த அதிகரிப்பில் 70% வீதமானவை தமிழ் வாக்குகள் என்பது குறிப்பிடத்தக்க விடயம். மேற்படி களநிலைமைகள், புள்ளி விபரங்களைக் கருத்திற் கொண்டு மக்கள் களம் மட்டக்களப்பு மாவட்ட தேர்தல் முடிவுகள் எவ்வாறு அமையப் போகின்றன என்ற ஆய்வினை மேற்கொண்டது.

ஆய்வின் மூலம் பெறப்பட்ட கருத்துக் கணிப்புகள் இரண்டு முடிவுகளுக்குள் வகைப்படுத்தப்பட்டு முன்னிலைப்படுத்தப்பட்டன. மேலும் தேர்தல் முடிவின் சிறிய வித்தியாசங்கள் கட்சிகளின் ஆசனப் பங்கீட்டில் செல்வாக்குச் செலுத்தும் தன்மையையும் இம்முறை தேர்தல் முடிவுகள் சுமந்து வரும்.

1. கருத்துக் கணிப்பின் 55% வீத முடிவுகளின் படி கட்சிகள் பெறப்போகும் ஆசன எண்ணிக்கையினைப் பார்க்கையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு 04 ஆசனங்கள், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 01 ஆசனம் என்ற அடிப்படையில் பெறுவதற்கான வாய்ப்புகள் அமைந்துள்ளதாக சமிக்ஞை வெளியிடப்பட்டுள்ளது. இந்த ஆசனப் பங்கீடுகளிற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சுமாராக 135,000 வாக்குகளையும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சுமார் 34,000 வாக்குகளையும், ஐக்கிய தேசிய முன்னணி சுமார் 25,000 வாக்குகளையும், ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு சுமார் 21,000 வாக்குகளையும் பெறும்.

2. கருத்துக் கணிப்பின் 40% வீத முடிவுகளின் படி கட்சிகள் பெறப்போகும் ஆசன எண்ணிக்கையினைப் பார்க்கையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு 03 ஆசனங்களையும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் ஐக்கிய தேசிய முன்னணி என்பன தலா ஒவ்வொரு ஆசனங்களைப் பெற்றுக் கொள்ளும். மேற்படி ஆசனப் பங்கீட்டைப் பெற்றுக் கொள்வதன் பொருட்டு கட்சிகள் எடுக்கப் போகும் வாக்குகளைப் பார்க்கையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு சுமாராக 120,000 வாக்குகளையும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சுமார் 32,000 வாக்குகளையும், ஐக்கிய தேசிய முன்னணி சுமார் 27,000 வாக்குகளையும், ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு சுமார் 24,000 வாக்குகளையும் பெறும்.

3. கருத்துக்கணிப்பின் 05% வீத முடிவுகள் தேர்தல் பெறுபேறுகளை வைத்துக்கொண்டு தான் தங்கள் கருத்துக்களைப் பகிரலாம் என்ற முடிவினையும் கொடுத்துள்ளது. எவ்வாறெனினும் மேற்குறித்த இருமுடிவுகளில் ஒன்றினை ஒத்ததாகவே மட்டக்களப்பு தேர்தல்களம் அமையும் என்பதை மக்கள் களம் எதிர்வு கூறுகின்றது.

த‌மிழ் சிறுமிகள் வ‌ன்புண‌ர்வு பின்னணியில் இனவாத சக்திகளா? உலமா கட்சி

Read More