தமது மொழி, தமது மதம், தமது இனம் என்று சிந்திப்பவர்கள் இந்த இடத்திற்குத் தகுதியற்றவர்கள்!

தமது மொழி, தமது மதம், தமது இனம் என்று சிந்திப்பவர்கள் இந்த இடத்திற்குத் தகுதியற்றவர்கள். அனைத்து மக்களையும் சமமாகப் பரிபாலிக்கக் கூடியவர்கள் தான் மக்களுடைய தலைவர்களாக இருக்க முடியும்.

இந்த நாட்டில் இப்போது எல்லா இடங்களிலும் சிங்கக் கொடி பறந்து கொண்டிருக்கின்றது. வடக்கு கிழக்கில் இந்தச் சிங்கக்கொடி சுதந்திரமாகப் பறந்து கொண்டிருக்கும் நாட்கள் இவைதான் என்பதனை எல்லோரும் உணர்ந்து கொள்ள வேண்டும். என கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கிருஸ்ணபிள்ளை துரைராசசிங்கம் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் அதிதியாகக் கலந்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

தொடர்ந்தும் அவர் கருத்து தெரிவிக்கையில்,

அரசியல் சார்ந்த விடயத்தில் தற்போது மதம் சார்ந்த விடயம் இந்த அரசியல் அமைப்புச் சட்டத்தைக் குழப்பி விடுமோ என்ற ஒரு கட்டத்திற்குப் போயிருப்பதாகச் செய்திகள் கூறுகின்றன. அவ்வாறான குழப்பத்தைச் சிலர் உண்டாக்குகின்றார்கள்.

இலங்கையில் புதிய அரசியல் அமைப்புச் சட்டம் உருவாக்கப்பட வேண்டும் என்பதனை முழு நாடாளுமன்றமும் எந்த விதமான எதிர்ப்பும் இல்லாமல் நிறைவேற்றியிருக்கின்றது.

எனவே அதுபற்றி யோசிக்க வேண்டியது கிடையாது. இது பாராளுமன்றத்தினால் எடுக்கப்பட்ட முடிவு. அந்த அடிப்படையில் தற்போது விடயங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

அதிகாரப் பரவலாக்கல் என்பது எல்லோருக்கும் தேவைப்படுகின்றது. எமது முதலமைச்சர் உட்பட எல்லா முதலமைச்சர்களும் அதிகாரப் பரவலாக்கத்தினை வலியுறுத்தியிருக்கின்றார்கள்.

அதிகாரப் பரவலாக்கலில் யாருக்கும் எந்தவித எதிர்முகமான சிந்தனையும் கிடையாது. இவ்வாறான இந்த அரசியல் அதிகாரங்களைக் கூடுதலாக மாகாணங்களுக்கு கொடுக்கின்ற அதே நேரத்திலே கொடுத்த அதிகாரங்கள் மீளக் கைவாங்கப்படாத எற்பாடுகள் அங்கு செய்யப்பட வேண்டும் என்பதில் நாங்கள் மிகவும் உறுதியாக இருக்கின்றோம்.

மீள கைவாங்கப்படாத, அந்தந்த பிரதேசத்தினுடைய மக்களினுடைய இறைமையை மதிக்கக் கூடிய விதத்திலே அரசியலமைப்பு அமைக்கப்பட வேண்டும்.

இந்த இறைமை தொடர்பாகப் பார்க்கின்ற போது வடக்கு கிழக்கு பிரதேசங்களிலே வாழும் மக்கள் தொடர்ச்சியாக ஒரு தனித்துவமான ஆணையை வழங்கிக் கொண்டிருக்கின்றார்கள்.

இது ஆற்றிலே கரைத்த புளியாக நாடாளுமன்றம் என்று சொல்லப்படுகின்ற அந்த 225 உறுப்பினர்களுக்குள்ளேயே சென்று மறைந்து விடுகின்றது. அவ்வாறு இருக்காமல் இந்தப் பிரதேசத்தினுடைய மக்கள் சிறப்பாக தங்களுக்குரியது என்று காட்டுகின்ற மொழி, இன, மத, பிரதேச அடையாளங்கள் என்பவற்றை உள்வாங்கியதாக இந்தப் புதிய அரசியலமைப்பு வர வேண்டும்.

அங்கு வருகின்ற மதம் தொடர்பான விடயத்தில் தற்போது மதங்களுக்கு இருக்கின்ற அந்த விடயங்களில் குறைவு ஏற்படக் கூடாது என்று யாரும் விரும்புகின்ற போது அதோடு ஒட்டி சிந்திப்பதற்கு நாங்கள் தயாராக இருக்கின்றோம்.

இது தொடர்பில் மகாநாயக்க தேரர்களுக்கு ஜனாதிபதி பிரதமர் ஆகியோர் தெளிவுப்படுத்தி இருக்கின்றார்கள்.எல்லா மதங்களுக்கும் உரிய இடங்கள் கொடுக்கும் வகையிலான அரசியலமைப்பு ஏற்பாடுகள் இருக்கின்ற போது அது சம்பந்தமாக நாங்கள் சாதகமாகச் சிந்திப்பதற்கு நாங்கள் தயாராக இருக்கின்றோம்.

இந்த விடயத்தை மட்டும் அடிப்படையாகக் கொண்டு இந்த நாட்டில் தற்போது இருக்கின்ற நிலைமையைக் குழப்பக் கூடாது.

இந்த நாட்டில் இப்போது எல்லா இடங்களிலும் சிங்கக்கொடி பறந்து கொண்டிருக்கின்றது. வடக்கு கிழக்கிலே இந்தச் சிங்கக்கொடி சுதந்திரமாகப் பறந்து கொண்டிருக்கும் நாட்கள் இவைதான் என்பதனை எல்லோரும் உணர்ந்து கொள்ள வேண்டும்.

இதற்கு முன்பும் சிங்கக் கொடி இங்கு பறந்தது அது இராணுவ பொலிஸ் காவலுடன் அல்லது தமிழ் மக்களின் ஒரு எதிர்முகமான எண்ணத்தோடு தான் பறந்து கொண்டிருந்தன. தற்போது இருப்பதைப் போன்று எமது மக்கள் ஏற்றுக் கொள்கின்ற சிந்தனையோடு இதுவரை இந்தச் சிங்கக் கொடி பறக்கவில்லை.

தற்போது பறந்து கொண்டிருப்பதைப் போன்று சிங்கக் கொடி பறந்து கொண்டிருக்க வேண்டுமாக இருந்தால் தற்போது இருக்கின்ற இந்த அரசியல் நிலைமை தொடர்ச்சியாக இருக்க வேண்டும்.
அந்த வகையிலே இந்த நாட்டை வைத்திருக்க வேண்டும் என்றால் தற்போது உருவாக்கப்படுகின்ற இந்த அரசியலமைப்புச் சட்டத்தை நடைமுறைக்கு கொண்டு வரவேண்டும்.

இந்த வடக்கு கிழக்கிலே இருக்கும் தமிழ் முஸ்லீம் மக்கள் ஒன்றாக இணைந்து ஒரு தீர்வினைச் சொல்லுவார்கள் என்றால் அது தான் இந்த நாட்டினுடைய தீர்வாக இருக்கும். அதை யாரும் எதிர்க்க முடியாது.

ஏனெனில் எங்களை வைத்துத் தான் அவர்கள் இதனைக் குழப்புவார்கள். எனவே இந்தக் குழப்பத்தை ஒரு எச்சரிக்கையாக எடுத்துக் கொண்டு நாங்கள் செயற்பட வேண்டும்.

இங்கிருக்கின்ற நாம் அனைவரும் ஒருவரில் ஒருவர் தங்கியிருக்கின்றோம். வாழ்வதாக இருந்தால் அனைவரும் வாழ வேண்டும். இல்லையேல் அனைவரும் ஒன்றாக மாழ வேண்டும். இது தான் தேசப்பற்று.

இதில் ஒரு குறிப்பிட்டவர்கள் மாத்திரம் அனுகூலங்களை எடுத்துக் கொண்டு பூமித் தாய் பொதுவாகப் போட்டவற்றை புத்தியுள்ளவர்கள் தமக்குள்ள சக்தியால் தாம் மட்டும் அனுபவிக்க சங்கல்ப்பிப்போர் இங்கு இருக்கக் கூடாது.

இது எல்லோருக்கும் உரிய வளம். இந்த வளத்தில் அதிகாரங்கள், அதிகாரிகள், அமைச்சர் என்று பொறுப்பிக்கப்படுபவர்கள் எல்லோரையும் சமமாகப் பார்க்கக் கூடியவர்களாக இருக்க வேண்டும்.


தமது மொழி, தமது மதம், தமது இனம் என்று சிந்திப்பவர்கள் இந்த இடத்திற்குத் தகுதியற்றவர்கள். அனைத்து மக்களையும் சமமாகப் பரிபாலிக்கக் கூடியவர்கள் தான் மக்களுடைய தலைவர்களாக இருக்க முடியும்.

என்னுடைய இனம் மதம், மொழி சார்ந்தவர்களுக்கு அள்ளிக் கொடுக்க நினைக்கும் போது அங்கு சேவை மூளியாக ஆகிவிடுகின்றது.

அவ்வாறு இல்லாமல் அவர்கள் அவர்களுக்குத் தேவையானவற்றை அவரவர் நிலைமைக்கு ஏற்ற விதத்தில் ஒப்புரவு என்று சொல்லப்படுகின்ற விதத்திலே வழங்க வேண்டும்.

அவ்வாறு வழங்கப்பட்டு சம நீதி பேணப்பட வேண்டும் அதற்காக கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த நாங்கள் பல கரடு முரடுகளை நீக்கிக் கொண்டு அந்தப் பாதையில் செல்வோம் என கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கிருஸ்ணபிள்ளை துரைராசசிங்கம் குறிப்பிட்டுள்ளார்.

முறக்கொட்டான்சேனையில் இடம்பெற்ற விபத்து இளைஞர் பலி

Read More