காலாகாலமாக தொடர்கின்றது எங்கள் அவல நிலை.... என்று தணியும் எங்கள் தாகம்!

(ஜெயந்தன்)மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர் பற்று பிரதேச செயலாளர் கித்தூள், மரப்பாலம், சின்னப் புல்லுமலை, உறுகாமம், மரப்பாலம், பெரிய புல்லுமலை கோப்பாவௌி கொடுவாமடு, பன்குடாவௌி உள்ளிட்ட பல கிராமங்களைச் சேர்ந்த மக்கள்  வாழ்வியலில் முன்னேற்றமின்றி ஒரு துன்பகரமான வாழ்கையை கொண்டு செல்கின்றனர்.

இவர்களின் வாழ்வாதாரம், குடும்ப வருமானம், உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் பாதுகாப்பு உள்ளிட்ட தேவைகள் தொடர்பில்  அப் பிரதேச மக்கள் அண்மையில் கருத்துத் தெரிவித்தனர்.


விவசாயம், கால்நடை வளர்ப்பு, மேச்சல் தரை பிரச்சனை பல வருடங்களாக எவராலும் தீர்க்கப்படாமல் கிடக்கின்றது.

 
எங்கள் பிரதேசத்தில் கால்நடைகள் குறிப்பாக பசு மாடுகள் அதிகமாக உள்ளது. எங்கள் பிரதேச கால்நடைகள் குறைவாக இருந்தாலும் வௌி மாவட்டங்களையும், வௌி பிரதேசங்களை் சேர்ந்தவர்களின் கால்நடைகளே இங்கு கொண்டுவரப்பட்டு வளர்க்கப்படுகின்றது.

ஏறாவூர் பற்று பிரதேசத்திலுள்ள மாதவணை, மயிலந்தமடு பகுதிக்கு பெரும்போக செய்கை பண்ணப்படும் மாரி காலத்தில் பல பிரதேசங்களிலிருந்தும் மொத்த மாடுகளையும்  இங்கு மேச்சலுக்காக கொண்டுவரப்படுவதால் பெரும் பிரச்சனை உருவாகின்றது. இதனால் விவசாயிகளுக்கும் மாடு வளர்ப்போருக்கும் மோதல்களும் முரண்பாடுகளும் ஏற்படுகின்றது.  

ஒரு காலத்தில் மேச்சல்தரைக்கென ஒதுக்கப்பட்டதாக கூறப்படும் இப் பிரதேசங்களில் இந்த மாடுகள் குறிப்பிட்ட ஒரு பிரதேசத்தில் வளர்ப்பதாலும் அங்கு முழுமையாக மேச்சல் தரை பயன்படுத்தக்கூடிய சூழ்நிலை இல்லாததால், அது விவசாயிகளில் பயிர்களையும் நாசம் செய்துவிடுகின்றது. அதேபோன்று, மாடுகளுக்கு மேச்சலுக்கான புற்கள் போதியளவு இல்லாததால் மாடுகள் இறக்கும் நிலையும் ஏற்படுவதண்டு.

மற்றும், எமது மாதவணை, மயிலந்தமடு பகுதியில்  பொலனறுவை மாவட்டத்தைச் சேர்ந்த சுமார் முப்பது நாற்பது பெரும்பான்மை இன குடும்பங்கள் தற்காலிகமாக வசித்து வருகின்றனர். இவர்கள் எமது எல்லைக் கிராமங்களில் புகுந்து மேச்சல் தரையெனக் குறிப்பிடப்படும் மட்டக்களப்பு எல்லைப் பகுதிகளில் விவசாயம் செய்வதால் அப் பகுதிக்கு கால்நடைகள் செல்லும்போது அதனை துப்பாக்கியால் சுட்டும் வெட்டியும் கொல்கின்றனர். அதுமட்டுமல்லாமல் கால்நடை வளர்ப்போரை பொலிஸார் கைது செய்கின்றார்கள். இதன் காரணமாக இங்கு இன முரண்பாடுகள்  தொடர்ந்தவண்ணமே உள்ளது.

இவ்வாறான செயற்பாடுகள் வருடக்கணக்கில் தொடர்ச்சியாக இடம்பெற்றவண்ணமே உள்ளது. இதற்கு இற்றவரை எந்தத் தரப்பினராலும் ஒரு தீர்வைப் பெற்றுத்தர முடியவில்லை. கடந்த 1983ஆம் அண்டு காலப்பகுதியில் குறிப்பிட்ட பகுதி மேச்சல்தரைக்கென ஒதுக்கப்பட்டதாக கூறப்படுகின்றது. இதற்குரிய ஆவணங்களையெல்லாம் சேகரித்து கடந்த 2010 ஆண்டு பிரதேச, மாவட்ட மட்டத்தில் அடையாளமிடப்பட்டு தீர்மானிக்கப்பட்டதற்கமைவாக குறித்த காணிகளை வர்த்தகமானி பிரகடனம் செய்யலாம் அல்லது வேறு பொருத்தமான முறையில் தீர்த்து வைக்கலாம். இதனை கையாளும் தரப்பினர் இறுதி முடிவு வரை கொண்டுசென்று தீர்வைப் பெறவேண்டும். ஆனால், இந்தப் பிரச்சனையை தீர்த்துவைக்க முடியாமல் இந்த நாள் வரைக்கும் சம்மந்தப்பட்ட தரப்பினர் இழுத்தடித்துக்கொண்டே செல்கின்றனர்.

இங்கு அரச அதிகாரிகள் சென்று பார்வையிட்டுள்ளனர் மாகாணசபை உறுப்பினர்கள் அமைச்சர்கள் இப்படி அனைவரும் சென்று பார்வையிட்டு வந்ததுதான் முடிவு எந்த தீர்வும் கிடைக்கவுமில்லை தீர்வுக்கான திட்டங்களும் வகுக்கப்பட்டதாக எமக்கு தெரியவுமில்லை.


இந்த விடயம் பற்றி அபிவிருத்திக் குழு கூட்டத்திலும் வேறு இடங்களிலும் சம்மந்தப்பட்டோர் அதைச் செய்வோம் இதைச் செய்வோம் என கதைப்பார்கள் கதைப்பதுடன் அதை நிறுத்திக்கொள்கின்றார்கள்.   என ஒரு பிரதேசவாசி தெரிவித்தார்.

குளங்களையும் வாய்கால்களையும் புனரமைப்புச் செய்து அபிவிருத்தியை ஏற்படுத்த வேண்டும்

 
இப் பிரதேசத்தில் விவசாயம் ஒரு பிரதான இடத்தினைப் பெற்றுள்ளது. இங்குள்ள குளங்கள் மிக நிண்ட காலமாக புனரமைக்கப்படாமல் காணப்படுகின்றது. இதன்காரணத்தால் இங்குள் தண்ணீர் வீண் விரையமாக்கபடுகின்றது. இங்குள்ள பெரிய குளமான உறுகாமம் குளத்தை பார்த்தால், இக்குளத்தின் வடிகால் அமைப்பு நேர்த்தியாக இல்லாததால் மிக அதிகமான தண்ணீர் வீண்விரையமாக செல்கின்றது. பெலனறுவை பிரதேத்துடன் ஒப்பிட்டால் அங்கு வடிகால் வாய்கால்கள் மிக நேர்த்தியாக அவிபிருத்தி செய்யப்பட்டுள்ளது. அதே போன்று எமது பிரதேத்திலும் இருக்குமானால் இப் பிரதேசத்தில் இன்னும் பல ஆயிரம் ஏக்கர்கள் விவசாயம் செய்யக் கூடியதாக இருக்கும்.

இத்தகைய குளங்கள் புனரமைக்கப்படாததால், சில சமயங்களில் குறிப்பிட்ட விவசாய நிலங்களுக்கு தண்ணீர் இல்லாமல்  விவசாயிகள் நஸ்டமடைகின்ற நிலையும் தொடர்ந்து ஏற்படுகின்றது.  இங்குள்ள சிறுகுளங்கள் புனரமைக்காததால் ஒவ்வொரு வருட மாரி மழையின்போதும் வௌ்ளம் ஏற்பட்டு குளத்தினுள் மண் நிரம்பும் நிலை ஏற்பட்டவண்ணம் உள்ளது. இதனால் இன்னும் சில வருடத்தில் குளங்கள் மூடப்படும் நிலையும் ஏற்பட வாய்ப்புள்ளது.

இங்குள்ள உறுகாமம் மற்றும் கித்தூள் குளங்களை இணைப்பது தொடர்பின் ஏற்கெனவே காமினி திஸாநாயக்க காலத்திலே ஒரு திட்டம் வந்தது. அது பிற்காலத்தில் பேசப்பட்டாலும்  அத்தகையதொரு திட்டம் தற்போது உருவாகும் நிலை உள்ளது.ண்டும்.

ஏனைய மாவட்டத்தில் குளங்களையும் வாய்கால்களையும் புனரமைப்பதுபோல் எமது மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள குளங்களையும் வாய்கால்களையும் புனரமைக்க வேண்டும்.

இக் குளங்களை யும் வாய்கால்களையும் புனரமைக்கும் பட்சத்தில் அப் பிரதேசத்திலுள்ள அதிகமான  தரிசு நிலங்களை விவசாயத்திற்கு பயன்படுத்தமுடியும் என்பதுடன் அருகிலுள்ள குடிநீர் கிணறுகள் வற்றாமல் இருப்பதுடன் இங்குள்ள கால்நடைகளுக்கும் அத் தண்ணீர் உதவும் என்பது நிதர்சனம். என ஒரு குடிமகன் கருத்துத் தெரிவித்தார்.


குடிநீர், போக்குவரத்து, காட்டுயானை பிரச்சனை இன்றும் தொடர்கின்றது.


செங்கலடி - பதுளை வீதியிலிருந்து மாவளையாறு, இராஜபுரம், சின்னப் புல்லும​லை கிராமத்துக்கு செல்வதானால் கிட்டத்தட்ட 03 கிலோ மீற்றர் தூரம் போகவேண்டும். குறிப்பிட்ட இந்த வீதிகளுக்கு  300மீற்றர், 500 மீற்றர் தூரம் அளவில்தான் கொங்கிரீட் போட்டிருக்காங்க மற்ற பகுதியெல்லாம் குழிவிழுந்து உடைந்து படு மோசமாக உள்ளது. இந்த நிலையில்தான் இங்குள்ள பெரும்பாலான உள் வீதிகள் உள்ளன்.


மாவளையாறு கிராமத்தில் 50 குடும்பத்தவர்கள் வசிக்கின்றார்கள். அங்கிருந்து  வைத்தியசாலைக்கு செல்வோர், கற்பிணிபெண்கள், தொழிலுக்கு செல்வோர், பாடசாலைக்கு செல்லும் பிள்ளைகள் இப்படியானவர்கள் எல்லாம் சேதமடைந்து குன்றும் குழியுமாகக் கிடக்கும் வீதியையே பயன்படுத்துகின்றார்கள்.

அடுத்ததாக குடிநீர் மற்றும் காட்டுயானை பிரச்சனை இங்கு  சற்று தூரம் சென்றே குடிநீர் பெறவேண்டும் அங்கு சென்றால் அந்த இடங்களில் கட்டுயானை நிற்கும். நேற்றும் கூட நான் தண்ணீர் எடுக்கச் செல்லும்போது யானை நிற்பதாக கூறினார்கள். இப்படி பயந்தவண்ணம் இப் பகுதி மக்களின் வாழ்க்கை ஓடுகின்றது.

இங்கு கல் மலைகள் அதிகம் அதனால் சாதாரண காலங்களில் கூட தண்ணீர் கிணறுகளில் தண்ணீர் கிடைக்காது. தண்ணீர் பெறுவதற்காக பிரதேச சபையிடம் சொன்னால் அவர்கள் சொல்கின்றார்கள் "உங்கள் வீதி சேதமடைந்து கிடப்பதால்  வாகனம் வரமுடியாது" என கூறுகிறார்கள். எங்களுக்கு வீதியை போடவேண்டியவர்கள் அந்த பிரதேச சபைதான். அவர்களே அப்படிச் சொல்கின்றார்கள்.

எங்கள் பிரச்சனைகளை கிராம அபிவிருத்தி சங்கத்தினூடாக பிரதேச அபிவிருத்தி குழுவில் கதைத்தால் "எதிர்காலத்தில் கவனத்தில் எடுப்போம், அடுத்த கட்டத்தில் அதைப்பற்றி பார்ப்போம்" என்றுதான் சொல்கிறார்கள். ஆனால் வருடக்கணக்காகியும் குறிப்பிட்ட பகுதிகளுக்கு எதுவும் கிடைத்ததாக இல்லை.
 

இங்கு இரவு நேரங்களில் யானைத் தொல்லை, ஆறு மணிக்கெல்லாம் யானை வந்துவிடும் அதன்பின்னர் வௌி இடங்களுக்கு செல்வதென்றால் உயிரை கையில் பிடித்துக்கொண்டுதான் செல்ல வேண்டும்.

யானை வேலி போடுவதற்கு குறித்த இடங்களை துப்பரவு செய்து விட்டு போய் ஒரு மாதத்திற்கு மேலாகிவிட்டது. அந்த இடத்தில் திரும்பவம் பற்றை முளைத்துவிட்டது. எங்களுக்கு யானை வேலியை விரைவாக போட்டுத் தந்தால் எங்கள் உயிருக்கு அச்சுறுத்தலாக இருக்கும் யானை தெல்லை ஓரளவேனும் குறைந்துவிடும்.
 
இப்படி பல தேவைப்பாடுகளுடன் காலாகாலம் வாழ்ந்துவரும் எமக்கு எப்போது தீர்க்கப்படும் எங்கள் தாகம் என்று புரியவில்லை.  யுத்தம் முடிஞ்சும் யுத்தகாலத்தில் இருப்பதுபோலவே பல துன்பங்களையும் சுமந்தவர்களாக நாங்கள் வாழ்கின்றோம் என்பதுதான் உண்மை.
என ஒரு பெண்மணி கருத்துத் தெரிவித்தார்.

ஆங்கிலம், விஞ்ஞானம் மற்றும் கணித பட்டதாரி ஆசிரியர்களுக்கு நாளை நியமனக் கடிதங்கள்

Read More