காணிகளைச் சூறையாடும் தமிழ் அரச அதிகாரிகளுக்கெதிராக வழக்குத் தொடுக்கத் தயங்கமாட்டேன்

சம்பந்தனை காட்டிக் கொடுத்த வியாளேந்திரன் எம்.பி என்று இணையத்தளங்களிலும் முகப்புத்தகத்திலும் செய்திகள் வெளியாகி இருப்பதை த.தே.கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாளேந்திரன் முற்றாக மறுத்துள்ளார்.

மட்டக்களப்பில் உள்ள அவரது அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

கடந்த நான்காம் திகதியில் இருந்து ஏழாம் திகதி வரையில் நாடாளுமன்ற அமர்வுகள் நடைபெற்றன. அந்த வேளையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாங்கள் ஒன்றுகூடி பல்வேறு விடயங்கள் தொடர்பில் பேசினோம்.

இது வழமையான ஒரு நடவடிக்கையாகும். கடந்த வியாழக்கிழமை அந்த கூட்டம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து சில இணையத்தளங்களிலும் முகப்புத்தகத்திலும் “சம்பந்தனை காட்டிக்கொடுத்த வியாளேந்திரன் எம்.பி” என்று செய்திகள் வெளியிடப்பட்டு வருகின்றன.

நான் தேசத் துரோகம் செய்தது போன்று அந்த செய்தி பிரசுரிக்கப்பட்டிருந்தது.

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரை இடமாற்றுவது தொடர்பில் மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் தலைவர் சம்பந்தனை சந்தித்து கலந்துரையாடியதாகவும் அதன்போது நாடாளுமன்ற உறுப்பினராகிய நான் அரசாங்க அதிபரை மட்டுமல்ல சில பிரதேச செயலாளர்களையும் இடமாற்ற வேண்டும் என்று கூறியதாகவும் அரசாங்க அதிபருக்கு உடனடியாக தகவல் பரிமாறியதாகவும் உடனயாக அவர் ரவூப் ஹக்கீமை தொடர்பு கொண்டதாகவும் பிரசுரிக்கப்பட்டிருந்தது. இது முற்று முழுதான பொய்யான செய்தி என குறிப்பிட்டுள்ளார்.

இந்த நாட்டில் யுத்தம் நடைபெற்றதே நிலத்திற்காகத்தான். ஆனால் இன்று பாரிய நில சூறையாடல்கள் நடந்து வருகின்றன. இந்த விடயத்தில் மிக முக்கியமாக இடைத்தரகர்களாகவும் உடந்தைகளாகவும் இருப்பவர்கள் ஒரு சில தமிழ் அரச அதிகாரிகளேயாவர்.

ஒருசில தமிழ் அரச அதிகாரிகள் மாவட்ட மட்டம் தொடக்கம் பிரதேச மட்டம், கிராம மட்டம் வரை காணி கொடுக்கப்பட்ட விடயத்தில் சம்பந்தப்பட்டிருக்கின்றார்கள். தகவலறியும் சட்டத்தின் மூலம் இது தொடர்பில் தகவல்களை நாங்கள் கோரியிருக்கின்றோம். அவர்களுக்கு எதிராக வழக்குகளை தொடர நாங்கள் தயங்க மாட்டோம்.

மேலும், பௌத்த உயர்பீட மகாநாயக்கர்கள் மத்தியில்கூட எங்களுடைய பிரச்சனைகள் முழுமையாக கொண்டு செல்லப்படாத சூழல் நீண்ட காலமாக இருந்து வருகின்றது.

தற்போதைய நிலையில் எமது பிரச்சினைகள் சிங்கள மக்கள் மத்தியிலும் மகாநாயக்கர்கள் மத்தியிலும் ஓரளவு பேசப்பட்டிருக்கின்றது. இருந்த போதும் அது இன்னும் கொண்டு செல்லப்படவேண்டும். அவர்கள் எங்களை இன்னும் புரிந்து கொள்ளாமல் இருப்பதற்கு அதுவும் ஒரு காரணமாகும்.

இந்த நாட்டில் மீண்டும் ஒரு யுத்தமோ அழிவோ ஏற்படுவதை நாங்கள் விரும்பவில்லை. மகாநாயக்கர்கள் எமது விடயத்தில் கனிவுடனும் மனித நேயத்தோடும் நடந்து கொள்ள வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பாகும் என நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாளேந்திரன் தெரிவித்துள்ளார்.

பிரித்தானியாவில் இடம்பெற்ற “உலகத் தமிழர் வரலாற்று மைய வளாக புகுவிழா”

Read More