விவேகானந்த தொழில்நுட்பவியல் கல்லூரி தனது 5வது ஆண்டு நிறைவு

 (பழுகாமம் நிருபர்)விவேகானந்த தொழில்நுட்பவியல் கல்லூரி தனது 5வது ஆண்டு நிறைவு அகவை விழாவினை 04.07.2017 சமூக நலன்புரி அமைப்பின் தலைவர் எஸ்.திருநாவுக்கரசு அவர்களின் தலைமையில் சிறப்பாகக் கொண்டாடியது.

இந் நிகழ்வின் விசேட நிகழ்வாக கல்லூரியின் 5 வருட செயற்பாடு, கல்லூரியின் திட்டங்கள், மற்றும் பல்வேறு பட்ட ஆக்கங்கள் அடங்கிய “பாசறை” என்னும் அழகி நினைவு மலர் வெளியீடப்பட்டது. கல்லூரிக்கும் அதில் பயிற்சிபெற்ற பயிலுனர்கள் ஒன்றிணைந்த விவேகானந்த இளைஞர் அணிக்கும் தொடர்ச்சியான நிதியுதவியினை வழங்கிக்கொண்டிருக்கும் கனடாவில் வசிக்கும் விசாகன் முருகேச தம்பதிகளை கௌரவிக்கும் நிகழ்வும் நடைபெற்றது. அத்தோடு கல்லூரிக்கு கிடைத்துள்ள தர முகாமைத்துவ முறைமை அங்கீகாரத்திற்காய் பாடுபட்ட கல்லூரியின் சேவையாளர்களை பாராட்டி சான்றிதழ் வழங்கும் நிகழ்வும், நடைபெற்றது.
இந்நிகழ்வில் கலந்து கொண்ட மூன்றாம் நிலைக்கல்வி தொழில்க்கல்வி ஆணைக்குழு பணிப்பாளர் வஜிர பெரேரா அவர்கள் கருத்து தெரிவிக்கையில் தற்போது தேசிய தொழில்சார் தகைமைக் கல்வியே எதிர்காலத்தில் தொழிலினை பெற்றுக்கொள்வதற்கு இலகுவானதாக அமைவதோடு, அரசும் அதற்கேற்ற வகையில் சுற்றுநிருபங்களை தயாரித்துவருகின்றது என்றும், அரச சார்பற்ற நிறுவனங்களாக இருந்தாலும் விவேகானந்த தொழில்நுட்பவியல் கல்லூரி சிறப்பான முறையில் பயிற்சியினை வழங்கிவருகின்றது என்றும், கிழக்கு மாகாண இளைஞர், யுவதிகள் இங்கு டிப்ளோமா பயிற்சியினை இங்கு தொடர்வதற்கு நல்ல சந்தர்ப்பம் என்றும்,  தொடர்ந்து இறுதி மட்டமான பட்டப்படிப்பினை கொழும்பில் உள்ள வாழ்க்கைத் தொழில்சார் தொழில்நுட்பவியல் பல்கலைக்கழம் சென்று ஒரு தொழில்சார் பட்டதாரியாக  வெளிவர வேண்டுமென்றும் கேட்டுக்கொண்டார்.
சர்வதேச தொழிலாளர் ஸ்தாபன திட்ட இணைப்பாளர் ஆர்.சிவப்பிரகாசம் அவர்கள் கல்லூரியுடன் கடந்த 2 வருடங்களாக இணைந்து செயற்றிட்டங்களை முன்னெடுப்பதாகவும், பயிற்சியினை மாத்திரம் வழங்காமல் பயிற்சியின் பின்னரான தொழிலினையும் பெற்றுக்கொடுக்கக்கூடிய வகையில் பயிற்சிகளை வடிவமைத்து வழங்குவது கல்லூரியின் சிறப்பம்சம் என குறிப்பிட்டார்.  அதிதிகள் பலரும் கல்லூரியின் சிறப்பான செயற்பாடு, மற்றும் சேவைகள் பற்றி தங்கள் கருத்துக்களை கூறினர். அத்தோடு விரிவுரையாளர் எஸ்.சசிதரன் அவர்கள் கல்லூரியின் கற்பனை என்ற தலைப்பிலான விவரணத்தினை உலகளவிய ரீதியில் உள்ள தேவைப்பாடுகள் மற்றும் விவேகானந்தரின் கொள்கைகள் அதிலிருந்து கல்லூரியும் அதன் நிறுவுனரும் எடுத்துக்கொண்டுள்ள செயற்பாடுகள், கல்லூரியின் ஆதாரமான ஆன்மீகத்தை தழுவிய சேவையே தொடர்ச்சியான வளர்ச்சிக்கு பங்களிக்கின்றது என்பதனை தெளிவாக எடுத்துக்காட்டினார். கல்லூரியின் எதிர்கால திட்டமிடலில் சிறந்த தொழில் வழிகாட்டலை வழங்கக்கூடிய ஒரு பிரிவு, தொழில் சந்தைவாய்ப்பு பற்றிய ஆய்வினை நடாத்தி அதுபற்றிய ஆவணப்படுத்தல் பிரிவினை நவீன முறையில் நிறுவல், மற்றும் நவீன மயப்படுத்தப்பட்ட மற்றும் மின் நூலகம் அமைத்தல் போன்ற திட்டங்களை உள்ளடக்கிய செயற்பாடுகளை முன்னெடுத்தல் தற்போதைய காலத்தின் தேவையாகும் என குறிப்பிட்டார்.
கல்லூரியின் 5 வருட கால செயற்பாடுகளையும், அதன் வளர்ச்சியினையும், கல்லூரியின் பயிற்சி நடவடிக்கைகளின் மாற்றங்கள் பற்றியும் தெளிவுபடுத்தியதோடு அனைவருக்கும் கணினி அறிவு கிடைக்கவேண்டும் என்று இலவசமான பயிற்சியினை நடாத்துவதற்காக ஆரம்பித்த இந்த கல்லூரி தற்போது கணினித் துறையில் வேலைவாய்ப்பு உள்ள பயிற்சியின் நடாத்தி தொழிலினைப் பெற்றுக்கொடுத்துள்ளதோடு தற்போது தொழில்நுட்பவியல் பயிற்சிகளையும், ஆங்கில மொழி விருத்திப் பயிற்சிகளையும் தேசிய தொழில் தகைமை முறையில் மட்டம் 5 வரை செய்வதற்கான ஏற்பாடுகளை செய்வதாக கல்லூரியின் பணிப்பாளர் க.பிரதீஸ்வரன் தெரிவித்தார்.

 

இந் நிகழ்வுக்கு ஆத்மீக அதிதியாக கல்லடி இராமகிருஷ்ண மிஷன் தலைவர் ஸ்ரீமத் சுவாமி பிரபுபிறேமானந்திஜீ மகராஜ் அவர்களும், மாவட்ட உதவி செயலாளர் ஆ.நவேஸ்வரன்;, சிறப்பு அதிதிகளாக மூன்றாம் நிலைக்கல்வி தொழில்க்கல்வி ஆணைக்குழு பணிப்பாளர் வஜிர பெரேரா, சர்வதேச தொழிலாளர் ஸ்தாபன தேசிய திட்ட இணைப்பாளர் ஆர்.சிவப்பிரகாசம்;, விசேட அதிதியாக கலந்துகொண்ட கனடாவில் இருந்து வருகைதந்த விசாகன் முருகேசு மற்றும் அவரது துணைவியார்; ஏனைய கௌரவ அதிதிகள் வரிசையில் கிழக்கு பல்கலைக்கழக பிள்ளைநலத்துறை பேராசிரியர் எம்.செல்வராஜர், கிழக்கு பல்கலைக்கழக விரிவுரையாளர் எஸ்.சசிதரன்;, மாவட்ட தொழில்ப்பயிற்சி அதிகாரசபை பணிப்பாளர் எம்.வீ.நளீம்,  மாணவர்கள், என பலரும் கலந்து சிறப்பித்தனர்.

  

  

  

  

முறக்கொட்டான்சேனையில் இடம்பெற்ற விபத்து இளைஞர் பலி

Read More