வறுமையை காட்டி பணம் உழைக்கும் கூட்டம்- 5 கோடியை ஏப்பம் விட்டனர்!

இலங்கையில் வறுமையில் முதலாவது கிராமத்தை கொண்ட மாவட்டமாக மட்டக்களப்பு மாவட்டம் உள்ள நிலையில் அதனை நிவர்த்தி செய்ய எடுத்த முயற்சிகளை விட அதனைக் காட்டி செயற்றிட்டங்களை பெற்றுக்கொண்டதற்கு எடுத்த முயற்சிகளே அதிகமாக உள்ளது.

மட்டக்களப்பு மாவட்டம் கடந்த பல வருடங்களாக வறுமையில் முன்னிலையில் உள்ளது. கிழக்கு மாகாணத்தில் வறுமையில் முதலிடத்தில் உள்ள மட்டக்களப்பு மாவட்டம் தேசிய ரீதியாக வறுமையில் நான்காவது இடத்தில் உள்ளது.
குடிசன மதிப்பீட்டு புள்ளி விபரத் திணைக்களத்தின் படி 2005ம் ஆண்டு மாவட்டத்தின் வறுமை 10.60 வீதமாக காணப்பட்டதோடு இலங்கையின் தேசிய வறுமை 28.8 வீதமாக இருந்துள்ளது.

2015ம் ஆண்டு மட்டக்களப்பு மாவட்டத்தின் வறுமையானது 19.2 வீதமாக அதிகரித்துள்ளதுடன் இலங்கையின் தேசிய வறுமை 06.70 வீதமாக மாற்றமடைந்துள்ளது.

அதாவது மட்டக்களப்பு மாவட்டத்தின் வறுமை வீதம் பத்துவருடங்களுக்கு பின்னர் அதிகரித்துள்ளதே தவிற அது குறைந்தபாடில்லை ஆனால் இலங்கையின் தேசிய வறுமை வீதம் மட்டும் கணிசமான அளவு குறைவடைந்துள்ளது. தேசிய வறுமை வீதம் குறைவடைந்துள்ள நிலையில் மாவட்டத்தின் வறுமை வீதம் அதிகரித்துக்கொண்டே சென்றுள்ளது என்றால் இதற்கு யார் காரணம்?

ஆனால் கடந்த ஐந்து வருடங்களாக பல கோடிரூபா நிதி மட்டக்களப்பிற்கு வழங்கப்பட்டும் மட்டக்களப்பின் வறுமை நிலை குறைந்தபாடில்லை.
மட்டக்களப்பின் வறுமையான கிராமசேவையாளர் பிரிவாக வடமுனை ஊத்துச்சேனை கிராமம் பதிவாகியுள்ளது அதேபோன்று வறுமையான பிரதேசமாக வவுணதீவு பிரதேசம் பதிவாகியுள்ளது. ஆனால் அந்த பகுதிகளின் வறுமை ஒழிப்புக்கு என்ன செய்தார்கள்.

இன்று வாகரையில் இருந்து கதிரவெளி ஊடான பாதை ஓரத்தில் சில குடும்பங்கள் தங்களது வாழ்வாதாரத்திற்காக கற்களை சேகரிக்கும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.

குறித்த புகைப்படங்களில் சிறுவர்கள் முதியவர் அங்கவீனமுற்றவர் என ஒரு குடும்பம் வறன்ட பூமியில் சல்லிக் கற்களை சேகரிப்பதை அவதானிக்க கூடியதாக உள்ளது.

இது சோமாலியாவை விட மோசமாக உள்ளது. இதற்கு என்ன காரணம்.
ஆனால் மட்டக்களப்பில் உள்ள அரச திணைக்களங்கள் எல்லாம் மட்டக்களப்பின் வறுமையை முதலீடாக பயன்படுத்தி கருத்தரங்குகளையும் பயிற்சிவகுப்புக்களையும் ஆய்வுகளையும் குளிரூட்டப்பட்ட அறைகளில் இருந்துகொண்டு நாடாத்துவதுடன் அதற்கு பல ஆயிரக்கணக்கான பணங்களையும் பெற்றுக்கொண்டு சென்று விடுகின்றனர். ஆனால் வறுமை ஒழிப்புக்கான எந்தவித திட்டமும் வெற்றியளித்ததாக இல்லை. மீண்டும் அடுத்த வருடம் இதே வருமையை காட்டி அதேசெயற்பாடுகளை தொடர்கின்றார்கள் இதனால் அதிகாரிகள் உள்ளிட்ட திட்டம் தயாரிக்கும் அதிகாரிகள் வரை பலஆயிரம் ரூபாய்களை சுருட்டிவிடுகின்றனர்.

5 கோடியை ஏப்பம் விட்ட கூட்டம்!

அண்மையில் மட்டக்களப்பு மாவட்டத்தின் அபிவிருத்திக்காக வெளியிடப்பட்ட ஐந்தாண்டு திட்டம் தயாரிக்க ஐந்து கோடி செலவாகியுள்ளது என்றால் நம்புவீர்களா? யூ.என்.டி.பி நிறுவனத்தின் நிதி ஒதுக்கீட்டில் தயாரிக்கப்பட்ட இந்த ஐந்தாண்டு திட்டத்திற்கு ஐந்து கோடிகள் செலவு செய்யப்பட்டிருந்தும் அது பல குறைபாடுகளுடனேயே வெளியிடப்பட்டுள்ளது.

இந்த ஐந்தாண்டு திட்டம் தயாரிப்பதற்கு உப வேந்தர் உள்ளிட்ட பலருக்கு மணித்தியாலம் ஒன்றிற்கு சுமார் 27 000 ரூபாய் வரை வழங்கப்பட்டுள்ளதுடன். ஒரு கூட்டத்திற்கான செலவு ஒரு இலட்டத்திற்கு அதிகமாக செலவு செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

கூட்டங்கள் நடத்தியது வரிவுரைகள் வழங்கியது ஆய்வுகள் மேற்கொண்டது என பல்கலைகழக விரிவுரையாளர்கள் உட்பட மாவட்டசெயலகத்திற்கு வேண்டியவர்கள் என பலருக்கு இரண்டு கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டு மீதி மூன்று கோடிரூபாய் பணமும் திட்டமிடல் பிரிவுக்கு வழங்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இத்தனைக்கு மாவட்டத்தில் உள்ள 14 பிரதேச செயலாளர்களுக்கும் இந்த திட்டம் தயாரித்தது தெரியாதாம். அவர்களுக்கு திட்டம் வெளியிடும்போதுதான் அழைப்பு வந்ததாம் என்றால் அந்த திட்டம் எப்படி இருக்கும் என்று சொல்லத் தேவையே இல்லை.

இந்த ஐந்தாண்டு திட்டம் அவசர அவசரமாக தயாரிக்கப்பட்டுள்ளதை அவதானிக்க முடிகின்றது திட்டத்தில் பல எழுத்துப்பிழைகள் மற்றும் அதிகாரிகளின் பதவிகள் பிழையாக குறிப்பிடப்பட்டுள்ளதுடன் பல சொற்களும் பிழையாக அச்சிடப்பட்டுள்ளது.

அதை விட வருடாந்தம் நிதி அதிகரிக்கப்பட்டுக்கொண்டு போகின்றதே தவிர அந்த நிதிக்கான நடைமுறைச்சாத்தியமுள்ள எந்த செயற்திட்டமும் அந்த புத்தகத்தில் குறிப்பிடப்படவில்லை. மொத்தத்தில் நிறுவனத்தினால் வழங்கப்பட்ட ஐந்து கோடிரூபாய் பணத்திற்கு மாத்திரம் மாவட்டசெயலகம் பணியாற்றியுள்ளது குறித்த ஐந்தாண்டு திட்டத்தை படித்துப்பார்ப்பவர்களுக்கு புரியும்.
ஏனைய மாவட்டங்கள் இந்த திட்டத்தை தயாரிக்க குறைந்தளவு பணத்தையே செலவு செய்துள்ளமை தெரியவந்துள்ளது.

குறிப்பாக யாழ் மாவட்டம் இந்த திட்டத்தை தயாரிக்க அங்குள்ள பல்கலைகழக விரிவுரையாளர்கள் இலவசமாக பல திட்ட முன்மொழிவுகளை வழங்கியுள்ளதுடன் அங்குள்ள அனைவரினது கருத்துக்கள் கேட்கப்பட்டு மிகவும் குறைந்தளவு பணத்தை மட்டுமே செலவுசெய்து இந்த ஐந்தாண்டு திட்டத்தை தயாரித்துள்ளார்கள் என்றால் மட்டக்களப்பில் மட்டும் ஏன் இந்த சமூக அக்கரையுள்ள புத்தஜீவிகள் இவ்வளவு பணத்தை செலவு செய்யவேண்டுமென்ற கேள்வி எழுகின்றது.

ஆக மொத்தத்தில் கடந்த ஐந்தாண்டுகள் அல்ல இன்னு எத்தனை ஆண்டுகள் சென்றாலும் வறுமையை காட்டி பணம் உழைக்கும் கூட்டம் மட்டக்களப்பில் இருக்கும்வரை வறுமை ஒழிக்கப்படாது என்பதே வேதனை.

  

  

  

  

  

எங்கு நிர்வாகச் சீர்கேடு ? ஊடகவியலாளர்களை தாக்கும் வைத்தியர்கள்! (காணொளி)

Read More